அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவும் வகையில், $3 அல்லது அதற்கும் குறைவான விலையில் எளிதில் கிடைக்கும் உணவுவகைகளை வழங்கும் நூறு தானியங்கி விற்பனை இயந்திரங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமேற்கு வட்டாரம் முழுவதும் நிறுவப்படும்.
இவை, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உணவு, பானச் சேவை வழங்குநரான செலக்ட் குழுமத்தின் உடனடியாக உண்ணக்கூடிய உணவுச் சின்னமான ‘டேஸ்ட் ஏசியா’வால் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ‘ரெடி மீல்ஸ் @ நார்த் வெஸ்ட்’ திட்டத்தை, சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யி காங், சனிக்கிழமையன்று (மே 30) புளாக் 106பி, கான்பெரா ஸ்திரீட்டில் அறிவித்தார்.
“நார்த் வெஸ்ட் சமூக மேம்பாட்டு மன்றத்தின் இந்த அர்த்தமுள்ள முயற்சி, சிங்கப்பூரர்கள் தற்போதைய பொருளியல் நிச்சயமற்ற சூழலை நிர்வகிக்கவும் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவும் பல்வேறு அரசாங்க ஆதரவு நடவடிக்கைகளுக்குத் துணைபுரியும்,” என்று திரு ஓங் கூறினார்.
‘செலக்ட் குழுமம்’, குறைந்த வருமானம் ஈட்டும் கிட்டத்தட்ட 6,000 குடும்பங்களுக்கு $600,000 மதிப்புள்ள உதவித்தொலையை, அதாவது ஏறக்குறைய 200,000 வேளை உணவை வழங்கும். அந்தக் குடும்பங்கள் தானியங்கி விற்பனை இயந்திரங்களிலிருந்து இலவச உணவைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஒரு பிரத்தியேக அட்டையை அது வழங்கும்.
அனைத்து உணவுவகைகளும் ‘ஹலால்’ அங்கீகாரம் பெற்றவை. மேலும் சைவ உணவுத் தெரிவுகள், சாண்ட்விச் போன்ற விரைவுச் சிற்றுண்டிகள் முதலியவையும் கிடைக்கும்.
முதல் கட்டமாக, வடமேற்கு வட்டாரத்தின் 14 இடங்களில் உள்ள பொது வாடகைக் குடியிருப்புகளுக்கு அருகில் 14 விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படுவதன் மூலம் இந்தத் திட்டம் தொடங்கப்படும். கான்பெராவில் உள்ள உட்லண்ட்ஸ் ரைஸ், உலு பாண்டனில் உள்ள கிம் மோ ரோடு, செங்ஹுவாவில் உள்ள சென்ஜா ரோடு ஆகியவை இதில் அடங்கும்.
2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள், வடமேற்குப் பகுதியின் அனைத்து 20 இடங்களிலும் படிப்படியாக 100 விற்பனை இயந்திரங்கள் வரை வைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நாள்தோறும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த விற்பனை இயந்திரங்கள், குடியிருப்பாளர்களுக்கு மலிவான, ஆரோக்கியமான உணவு வகைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும்.

