அக்டோபர் 1 காலக்கெடுவிற்குள் வாகன நுழைவு அனுமதி (விஇபி) அனுமதி அட்டையை இன்னும் தங்கள் வாகனங்களில் ஒட்டாத வெளிநாட்டு வாகனங்கள் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) செப்டம்பர் 27ஆம் தேதி அறிவித்தது.
விஇபி தேவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பச் செயல்முறையில் தாமதம், தடங்கல்கள் தொடர்பில் சிங்கப்பூரில் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“2024 அக்டோபர் 1 முதல், விஇபி அமலாக்கம் படிப்படியாக செயல்படுத்தப்படும். விஇபி இல்லாத சிங்கப்பூர் வாகனங்கள் வழக்கம்போல் மலேசியாவுக்குள் நுழையலாம்,” என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் எய்டி ஃபட்லி ரம்லி செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், வாகன உரிமையாளர்கள் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடி வளாகத்திலும் இரண்டாவது இணைப்பில் உள்ள சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடி வளாகத்திலும் உள்ள ஜேபிஜே அதிகாரிகளிடமிருந்து, விஇபி அனுமதி அட்டைக்கு உடனடியாக பதிவுசெய்து, தங்கள் விஇபி அட்டையை விரைவில் பெற்றுக்கொள்ள நினைவூட்டப்படுவார்கள்.
“சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட விஇபி அனுமதி அட்டை இல்லாத தனியார் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மலேசியாவைவிட்டு வெளியேறும்போது எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க,” என்று திரு எய்டி கூறினார்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 62,635 தனியார் வாகனங்கள் செப்டம்பர் 25ஆம் தேதி வரை தங்கள் விஇபி அனுமதி அட்டைகளை செயல்படுத்தியுள்ளன என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சு, அக்டோபர் 1 முதல், சிங்கப்பூரில் இருந்து தரைவழியாக மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் செல்லுபடியாகும் விஇபியைக் கொண்டிருக்க வேண்டும் என்று மே மாதம் அறிவித்தது.
ஒவ்வொரு அனுமதி அட்டையிலும் ஒரு ஆர்எஃப்ஐடி (RFID) குறிச்சொல் உள்ளது. இது மலேசிய போக்குவரத்து அதிகாரிகள் நாட்டின் சாலைகளில் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை அடையாளம் காண அனுமதிக்கிறது. இது வாகனத்தின் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் நிலுவையில் உள்ள அழைப்பாணைகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும். அபராதத் தொகை நாட்டைவிட்டு வெளியேறுமுன் செலுத்தப்பட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த விஇபியைப் பயன்படுத்தலாம், அதேபோல் வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழையும் போது விதிக்கப்படும் 20 ரிங்கிட் (S$6) சாலைக் கட்டணத்தையும் செலுத்தலாம்.
சட்ட விதிகளின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்படாத வாகனங்களின் உரிமையாளர்கள் ஜோகூரில் நுழைவது மறுக்கப்படலாம் அல்லது செல்லுபடியாகும் விஇபி இல்லாதது கண்டறியப்பட்டால் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.