நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வீடமைப்புத் திட்டமான ‘வெர்ஸ்’ (Vers) குறித்த புதிய தகவல்களை தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வெளியிட்டுள்ளார்.
வரும் 2030களின் முதல்பாதியில் சில வட்டாரங்கள் அந்தத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படலாம் என்றும் அதிலிருந்து அந்தத் திட்டம் நடப்புக்கு வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம்தான் ‘வெர்ஸ்’.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பு வட்டாரங்களில் வசிப்போர் தங்களது 70 ஆண்டு பழமையான வீட்டை அரசாங்கத்திடமே திரும்பக் கொடுத்து இழப்பீடு பெறலாம். பழைய பேட்டைகளுக்குப் படிப்படியாகப் பொலிவூட்டும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி அது. அந்தத் திட்டம் 2018ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்டது.
‘செர்ஸ்’ எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய வீடமைப்புத் திட்டங்களைக் கொண்டுவரும் யோசனை எதுவும் இல்லாததால் ‘வெர்ஸ்’ திட்டம் தொடர்பான முயற்சிகளின்மீது அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் ஊடகங்களிடம் திரு சீ கூறினார்.
வெர்ஸ் திட்டம் தொடர்பான நிபந்தனைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“வெர்ஸ் கட்டமைப்பை உருவாக்கி அதனை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்,” என்றார் திரு சீ.
இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் (HIP II) பற்றிய தகவல்களையும் அப்போது அவர் வெளியிட்டார். வீவக வீடுகளை மேம்படுத்தும் இரண்டாவது சுற்று அது.
தொடர்புடைய செய்திகள்
இல்ல உரிமையாளர்கள் தங்களது 99 ஆண்டு காலக் குத்தகையின் இறுதிவரை தங்கியிருக்க அத்திட்டம் வசதி ஏற்படுத்தித் தரும் என்றார் அவர்.
செர்ஸ் மற்றும் வெர்ஸ் திட்டங்களின்கீழ், வீவக வீடுகளின் 99 ஆண்டுகாலக் குத்தகை நிறைவடைவதற்கு முன்னரே அவற்றை அரசாங்கம் திரும்ப வாங்கிக்கொள்ளும். வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்த வீடுகளை புதுப்பிக்க அரசாங்கம் அவ்வாறு செய்கிறது.
செர்ஸ் திட்டம் என்பது கட்டாயமானது. வீவக வீடுகளை மறுமேம்பாட்டுக்கு உட்படுத்துவதற்கான முழு உரிமையை அரசாங்கத்திற்கு வழங்குகிறது அந்தத் திட்டம்.
வெர்ஸ் அதிலிருந்து மாறுபட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட வட்டாரங்களில் 70 ஆண்டு அல்லது அதற்கு மேலும் பழைமையான வீடுகளை, குத்தகை நிறைவுறுமுன் மறுமேம்பாட்டுக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாமா என்பதை முடிவு செய்யும் உரிமையை வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்குகிறது இந்தத் திட்டம்.
1995ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய செர்ஸ் திட்டம், மறுமேம்பாட்டுக்கு உட்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு, சந்தை மதிப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை வழங்கும்.
ஆக அண்மைய செர்ஸ் திட்டம் 2022 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு, அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள 562 மற்றும் 565 புளோக்குகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.