தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் திட்டமல்ல ‘வெர்ஸ்’: அமைச்சர் சீ

2 mins read
94baa105-3343-49ff-8d44-384270d3934f
நடப்பில் உள்ள ‘செர்ஸ்’ திட்டம் கட்டாயமானது. இனி வரவிருக்கும் ‘வெர்ஸ்’ திட்டம் விருப்பத்தின் அடிப்படையிலானது என்று அமைச்சர் சீ விளக்கினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மறுமேம்பாட்டுக்கான ‘வெர்ஸ்6 திட்டம் அதிர்ஷ்டத்தை உருவாக்கக்கூடியதாகவோ செல்வத்தைப் பெருக்கக்கூடியதாகவோ இருக்காது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

99 ஆண்டு குத்தகையை எட்டக்கூடிய வீடுகளைக் கொண்ட வீவக பேட்டையில் விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம் ‘வெர்ஸ்’.

அத்திட்டம் குறித்து தஞ்சோங் பகார் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபூ செக்சியாங், பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரே லோ ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

‘வெர்ஸ்’ திட்டம் லாட்டரி போல அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய ஒன்றா என்று திரு ஃபூ கேட்டிருந்தார். அதேபோல, அடிப்படையில் இது ஒரு புதுப்பிப்புத் திட்டம் என்பதையும் செல்வத்தைப் பெருக்கக்கூடியதல்ல என்பதையும் அரசாங்கம் உறுதிசெய்யுமாறு திரு லோ கோரினார்.

அவர்களுக்கு புதன்கிழமை (செப்டம்பர் 24) விளக்கமளித்த அமைச்சர் சீ, உண்மையில் நடப்பில் உள்ள செர்ஸ் திட்டத்திற்கு அளிக்கப்படுவதைக் காட்டிலும் புதிய வெர்ஸ் திட்டத்திற்கு குறைவான இழப்பீட்டுத் தொகுப்புகளே வழங்கப்படும் என்றார்.

‘செர்ஸ்’ திட்டம் கட்டாயமானது. வீவக வீடுகளை மறுமேம்பாட்டுக்கு உட்படுத்துவதற்கான முழு உரிமையை அரசாங்கத்திற்கு வழங்குகிறது அந்தத் திட்டம். திட்டத்தில் பங்கேற்போர் தங்களது அரசாங்கத்திடம் கொடுக்கும் வீட்டுக்குப் பதில் புதிய வீட்டை 99 ஆண்டு கால குத்தகைக்குப் பெறலாம். அதற்கு சிறிய தொகை செலுத்த வேண்டியிருக்கும். அல்லது சில வேளைகளில் எந்தச் செலவும் இருக்காது.

அதன் காரணமாகவே, ‘செர்ஸ்’ திட்டத்தை வீவக வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் வருவாய் தரக்கூடிய ஒன்றாகக் கருதினார்கள். அதனால், திட்டத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட வீடுகளுக்கான மதிப்புகள் கூடின. மறுவிற்பனைச் சந்தையில் அவை அதிக விலையில் கைமாறின.

‘வெர்ஸ்’ அதிலிருந்து மாறுபட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட வட்டாரங்களில் 70 ஆண்டு அல்லது அதற்கு மேலும் பழைமையான வீடுகளை, குத்தகை நிறைவுறுமுன் மறுமேம்பாட்டுக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாமா என்பதை முடிவு செய்யும் உரிமையை வீவக வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்குகிறது இந்தத் திட்டம்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்போரின் வீடுகள் குறைவான குத்தகைக் காலத்தைப் பெற்றிருக்கும். அதனால், அதற்கேற்ப இழப்பீடும் குறைவாகவே இருக்கும் என்று திரு சீ தெரிவித்தார்.

வீடுகளின் மதிப்பு மாறுபடுவதற்கு ஏற்ப வெர்ஸ் திட்டம் செயல்படும் இடம் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகளும் மாறுபடும் என்று அவர் மன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

பழைய பேட்டைகளுக்குப் படிப்படியாகப் பொலிவூட்டும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியான ‘வெர்ஸ்’, 2018ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்டது.

அந்தத் திட்டம், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நடப்புக் வரக்கூடும் என்று அமைச்சர் சீ ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்