எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்க அதிக நேரம் தேவைப்படும் என்று ‘ஐசிஏ’ எனும் சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஜூன் 14ஆம் தேதி அன்று தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் என்பதால் கால தாமதம் ஏற்படக் கூடும் என்றும் ஃபேஸ்புக் பதிவில் அது எச்சரித்தது.
ஜூன் 13ஆம் தேதி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் 510,000 பேருக்குமேல் குடிநுழைவுச் சோதனையைக் கடந்து சென்றனர்.
இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, மே 25 முதல் ஜூன் 23 வரையிலான ஜூன் பள்ளி விடுமுறையில் வருவதால் இரு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரையிலான கடந்த புனித வெள்ளி வாரயிறுதி விடுமுறையில் சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் இரு சோதனைச் சாவடிகள் வழியாக ஏறக்குறைய 2.3 மில்லியன் பயணிகள் கடந்து சென்றனர். அதாவது நாள்தோறும் 455,000 பயணிகள் கடந்து சென்றதற்கு இது ஈடாகும்.
இந்த நிலையில் ஐசிஏ சில வேண்டுகோள்களை முன் வைத்துள்ளது. பயணிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு, பொறுமையைக் கடைப்பிடித்து, போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, வழித் தடங்களைப் பின்பற்றி குடிநுழைவுச் சோதனையின்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டது.
இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நிலவரங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஆணையம் நினைவூட்டியது.

