தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இதய அறுவை சிகிச்சை நோயாளிக்கான அங்கி

2 mins read
f26339d6-3340-407e-9b0d-9a1aac002885
‘ஆக்ஸோபிரேஸ்’ என்னும் அங்கியை உருவாக்க திரு சியூ இ இயன்னுக்கு ஓர் ஆண்டு ஆனது என அவர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இளம் வடிவமைப்புப் பொறியாளர்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ஜேம்ஸ் டைசன் விருதுக்கான போட்டி நடைபெறுகிறது.

இந்த அனைத்துலகப் போட்டி அவர்களின் தொழில் வாழ்க்கைக்குத் தொடக்கமாக இருக்கும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

“ஆக்ஸோபிரேஸ்” எனப்படும் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் திறம்படச் செயல்பட உதவும் அங்கியை வடிவமைத்த ஆடவருக்கும் இந்த ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருது வழங்கப்பட்டது.

அவருக்கு முதல் இடத்திற்கான பரிசுத் தொகை $8,000 கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு மொத்தம் 30 நாடுகளிலிருந்து 1,969 வடிவமைப்புகள் வந்தன எனவும் சிங்கப்பூரில் இருக்கும் ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டும் 48 வடிவமைப்புகள் வந்தன எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் பரிசு வென்ற 24 வயது ஆடவரின் பெயர் சீ இ இயன். இதயக் குறைபாட்டுடன் பிறந்த அவருக்கு இரண்டு இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் செயல்படச் சிரமப்படுவதை நன்கு உணர்ந்த இயன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தொழில்துறை ஆராய்ச்சி வடிவமைப்புப் பொறியாளர் பட்டம் பெற்ற அவர், தனது திறன்களையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் அங்கி ஒன்றை வடிவமைத்தார்.

தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளுக்குச் செயல்பட வழங்கப்படும் அங்கி நிலைத்தன்மை உடையதாக இல்லை எனவும் அது நோயாளிகளுக்கு அணிய சிரமமாக உள்ளதாகவும் திரு இயன் கூறினார்.

மேலும், காற்றில்லாத செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த அங்கியால் மனித உடலுக்குச் சிறந்த அழுத்தத்தையும் வளைவதற்கு ஏற்ற வசதியையும் தர முடியும் என அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்