நீண்டகாலச் சேவையாற்றிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணிகளின் உள்ளத்தில் இடம்பிடித்துள்ளார்.
அப்துல் லத்திஃப் முஹம்மது ரஃபி, 52, எனப்படும் அந்த ஓட்டுநர் கடந்த ஆண்டு தலைமைப் பேருந்து ஓட்டுநராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய பொதுப் பேருந்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் எட்டு தலைமைப் பேருந்து ஓட்டுநர்களில் திரு ரஃபியும் ஒருவர்.
உலு பாண்டான் பேருந்துப் பணிமனையில் அவசர உதவிக்குத் தயாராகக் காத்திருக்கும் ஓட்டுநர் குழுவில் திரு ரஃபியும் இடம்பெற்றுள்ளார். ஓட்டுநர்களில் யாரேனும் உடல்நலம் இல்லாவிட்டால் இவரைப் போன்றோர் உடனடியாக அந்தப் பணியை அன்றைய தினம் ஏற்க வேண்டும்.
மேலும், பேருந்து ஓட்டுநர்களை வழிநடத்தக்கூடியவராகவும் திரு ரஃபி உள்ளார்.
27 வயதில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் சேர்ந்த அவர் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்துள்ளார்.
நீண்டகாலமாக பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய அனுபவத்தின் மூலம், 52 வெவ்வேறு பேருந்துச் சேவைகளின் வழித்தடங்களை மனப்பாடமாக வைத்துள்ளார்.
அவர் வேலைக்குச் சேர்ந்தபோது சிறுவர்களாக இருந்த பயணிகள் பலரும் தற்போது பெரியவர்களாகிவிட்டதைக் காண்பதாக அவர் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் ஓட்டும் பேருந்துகளில் நீண்டகாலமாக பயணம் செய்த பலரும் திரு ரஃபியின் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அவர்களில் ஒருவர் 2015ஆம் ஆண்டு தமது மகனின் திருமணத்திற்கும் அதற்கு அடுத்த ஆண்டு புதுமனை புகுவிழாவுக்கும் திரு ரஃபியை அழைக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பழகி இருக்கிறார்.
சீனப் புத்தாண்டு விழாக் காலத்தில் அவரைத் தேடி வந்து ஹொங்பாவ் உரைகளைக் கொடுக்கும் பயணிகளும் உள்ளனர்.
அவரது முன்மாதிரிச் சேவைகளையும் பொதுநலனையும் பாராட்டி 2016, 2019ஆம் ஆண்டுகளில், போக்குவரத்துக்கான தேசிய கனிவன்பு தங்க விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் 2019, 2021ஆம் ஆண்டுகளில் திரு ரஃபிக்கு உன்னதச் சேவை விருது வழங்கி உள்ளது.