மோசடியைத் தடுக்கக் காவல்துறைக்கு உதவிய பாதிக்கப்பட்ட இளையர்

2 mins read
5ba81f7e-a880-4025-80a3-a342da84af7f
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் இதுவரை இல்லாத அளவுக்கு 1.1 பில்லியன் டாலர்களைப் பறிகொடுத்தனர். - படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிக் கும்பலுக்கு உதவியாகச் செயல்பட்ட 27 வயது நபரைக் காவல்துறையினர் பிடிக்க, மோசடியால் பாதிக்கப்பட்டவர் உதவினார்.

20 வயது திரு மைக் சென் (உண்மைப் பெயரன்று), சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் மோசடிக்காரரின் அறிவுறுத்தலின்படி ஒருவரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவரிடம் $30,000 பணத்தை வழங்கயிருப்பதாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுத்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில், சந்திப்பு நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மறைந்திருந்து மோசடிக்காரருக்கு உதவியாக இருந்த நபரை ஏப்ரல் 9ஆம் தேதி பிற்பகலில் பிடித்தனர்.

சீனாவைச் சேர்ந்த திரு. சென், அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் கும்பலால் பாதிக்கப்பட்டவர்.

கடந்த ஆண்டில் மோசடிகள் தொடர்பாக 1,504 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $151.3 மில்லியனை இழந்தனர்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் இதுவரை இல்லாத அளவுக்கு 1.1 பில்லியன் டாலர்களைப் பறிகொடுத்தனர்.

சீனாவைச் சேர்ந்த விசாரணை அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடிக்காரர் ஒருவர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தன்னைத் தொடர்புகொண்டதாகக் காவல்துறையின் ஏற்பாட்டின் பேரில் மே 5ஆம் தேதி நடந்த நேர்காணலில் திரு. சென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திரு சென்னின் வங்கி அட்டைக்கும் அனைத்துலக பணமோசடி வழக்கு ஒன்றிற்கும் தொடர்பிருப்பதாகவும் அவரைச் சந்தேக நபர் வரிசையில் காவல்துறை வைத்திருப்பதாகவும் மோசடிக்காரர் அவரிடம் கூறினார்.

இதனால், திரு சென் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவதாகவும் ஒரு நாளைக்கு ஐந்து முறை தனக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என மோசடிக்காரர் அவரிடம் சொன்னார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரை $70,000 செலுத்தி பிணையில் விடுவிக்க மோசடிக்காரர் உதவுவதாக வாக்குறுதி அளித்தார்.

பணத்தை இரு பங்காகப் பிரித்துச் சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடன் பணியாற்றும் வேறொரு நபரிடம் கொடுக்கும்படி ஏப்ரல் 9ஆம் தேதி மோசடிக்காரர் கூறினார்.

சந்தேகமடைந்த திரு சென், அதுகுறித்து தன் நண்பரிடம் தெரிவித்தார்.

அவருடைய நண்பர் அது ஒரு மோசடி வலை என எடுத்துரைத்த பிறகுதான் திரு சென், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

நண்பரின் உதவியோடு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, மோசடிக்காரரிடமிருந்து தம் பணத்தை மீட்டார்.

குறிப்புச் சொற்கள்