ஷாப்பி, யூனியன்பே, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் ஊழியர்களைப் போல நடித்து ஏமாற்றும் மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 1.4 மில்லியன் வெள்ளியை பலர் மோசடி சம்பவங்களில் இழந்ததைத் தொடர்ந்து இந்த அறிவுரை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஜனவரி மாதத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 28) காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஷாப்பி ஊழியரைப் போல நடிப்பவரிடமிருந்து வரும் அழைப்புகளில் காப்புறுதிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி, யூனியன்பே ஊழியர் என்று சொல்லப்படும் ஒருவருக்கு மாற்றிவிடப்படுகிறது.
அந்த நபர், காப்புறுதிக் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் ஷாப்பியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும் என்று கூறுவார்.
பின்னர் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை அவர் பெற்றுக் கொள்வார். அதோடு பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மற்றொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று அவர் வாடிக்கையாளரிடம் தெரிவிப்பார். ஆனால் பணம் மற்றொரு வங்கிக்கு மாறியதும் மோசடிக்காரர்களுடன் தொடர்புகொள்ள முடியாது. அதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பலர் உணர்கின்றனர்.
ஷாப்பி ஊழியரைப் போல நடித்து ஏமாற்றும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ஷாப்பியும் யூனியன்பேவும் சொந்த விவரங்களையோ பணத்தையோ தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்றவற்றின் வழியாக எந்த நேரத்திலும் கேட்காது என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் பொதுமக்களிடம் பணத்தை மாற்றவோ, சொந்த விவரங்களை கேட்கவோ செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது.