மிதிவண்டிப் பகிர்வு நிறுவனமான ஹலோரைட், அதன் மிதிவண்டியைச் சிறுவன் ஒருவன் ஈசூனில் உள்ள திடலில் தூக்கியெறிந்ததாகக் கூறப்பட்டதன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. அதனைக் காட்டும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
46 நொடி நீடிக்கும் காணொளியில், சிறுவன் ஒருவன் ஹலோரைட் மிதிவண்டியைத் தள்ளுவதையும் திடலில் உள்ள சுவர்மீது மீண்டும் மீண்டும் தூக்கியெறிவதையும் பார்க்கமுடிகிறது. டிக்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18), பயனர் ஒருவர் (@வெய்ஃபு_38) அதனைப் பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளி 31,000 தடவைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இணையவாசிகள் பலர், சிறுவனின் நடத்தை குறித்து குறைகூறியிருந்தனர்.
சிஎன்ஏ ஊடகத்தின் கேள்விகளுக்கு ஹலோரைட் ஏஷியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹெய்டன் சூ பதில் தந்தார். ஈசூன் ஸ்திரீட் 72ல் சம்பவம் நடந்ததாக அவர் சொன்னார். நிறுவனம் அதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு, ஒரு மணி நேரத்திற்குள் மிதிவண்டி மீட்கப்பட்டது.
காணொளியில் பதிவிட்ட பயனரை அடையாளம் கண்டுவிட்டதாய் நம்புவதாக ஹலோரைட் கூறியது. புலனாய்வில் உதவுவதற்கு ஏதுவாகக் காவல்துறையிடம் பயனரின் விவரங்களைக் கொடுத்துவிட்டதாகவும் அது சொன்னது.
ஈசூனில் மிதிவண்டியைத் தூக்கியெறிந்ததாகக் கூறப்படும் சிறுவனின் காணொளிப் படத்தை நிறுவனம் அதன் சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளது.
சிறுவன் குறித்துத் தகவல் தருவோருக்கு வரம்பற்ற இலவசச் சேவைகளை வழங்கப்போவதாகவும் ஹலோரைட் அதில் குறிப்பிட்டுள்ளது.

