சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக (எஸ்எம்யு) வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) நடந்த ஒரு சம்பவத்தைக் காட்டும் காணொளி பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணைக்குப் பெண்கள் இருவர் உதவி வருகின்றனர்.
டெலிகிராம், ரெடிட் எனும் இரு சமூக ஊடகங்களில் பரவிய அந்தக் காணொளியில், இளஞ்சிவப்பு உடை அணிந்திருக்கும் பெண் ஒருவர், தரையில் விழுந்து கிடக்கும் வயது முதிர்ந்த பெண் ஒருவரை உதைப்பது தெரிகிறது.
அங்கிருந்தவர்கள் கவலை தெரிவிப்பதைக் காணொளிவழி கேட்க முடிகிறது. அவர்களில் ஒருவர், அந்த வயதான பெண் மயங்கிவிட்டதாகவும் வளாகப் பாதுகாவலர்களை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அந்த முதிய பெண்ணை ஒரு ‘வளாகப் பராமரிப்பு ஊழியர்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிலர் அந்தப் பெண்ணுக்கு உதவ விரைவதையும் காண முடிகிறது.
அந்த 22 நொடிக் காணொளி எடுக்கப்படுவதற்குமுன் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், பிற்பகல் 2.10 மணியளவில் எண் 40 ஸ்டாம்ஃபர்ட் சாலையில் உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தன.
இவ்வழக்கு தொடர்பில் 21 மற்றும் 61 வயதுடைய பெண்கள் இருவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை சொன்னது.
ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த 61 வயதுப் பெண் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.