எம்ஆர்டி தண்டவாளத்திலிருந்து எடுக்கப்பட்டது போல தெரியும் காணொளி செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஜூன் 10) சமூக ஊடகத்தில் வலம் வந்ததை அடுத்து, அதுகுறித்து காவல்துறையிடம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
அந்தக் காணொளி கம்பிளைண்ட் சிங்கப்பூர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. அவ்வளவாக வெளிச்சம் இல்லாத இடத்தில் அருகில் உள்ள தண்டவாளத்தில் எம்ஆர்டி ரயில் ஒன்று செல்வதை அந்தக் காணொளி காட்டியது.
காணொளியை எடுத்த நபர் பிறகு ரயிலுக்கு அருகில் சென்றதையும் தண்டவாளத்தைக் கடந்து சென்றதையும் அதில் பார்க்க முடிந்தது.
காணொளி எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
“சீமெய் எம்ஆர்டி நிலையத்துக்கும் தானா மேரா எம்ஆர்டி நிலையத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் காணொளி எடுக்கப்பட்டது. அவ்விடத்தில் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைப்புப் பணிமனையை இணைக்கும் மேம்பாலச் சாலைகளுக்கான கட்டுமானத் தளங்கள் இருந்தன.
“இந்தச் சம்பவத்தை மிகக் கடுமையானதாகக் கருதுகிறோம். அத்துமீறி நுழைந்து தண்டவாளம் இருக்கும் இடத்துக்குச் செல்வது மிகவும் அபாயகரமானது,” என்று எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ் நிறுவனத்தின் தலைவர் லாம் சியூ காய் தெரிவித்தார்.

