இன நல்லிணக்கத்தை குறிவைக்கும் காணொளிகள்: விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

இன நல்லிணக்கத்தை குறிவைக்கும் காணொளிகள்: விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

2 mins read
c9e4214b-ea2c-480b-ac10-40db99988db6
ஜாலான் பசார் குடும்ப விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார். - படம்: எஸ்பிஎச் ஊடகம்

சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு அடையாளத்தையும், சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் சந்தேக விதைகளை விதைக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ வலியுறுத்தியுள்ளார். 

பல்லினச் சமூகக் கட்டமைப்பைக் குலைக்கும் வகையிலும், இந்தியச் சமூகத்தைக் குறிவைத்தும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்த 14 பதிவுகளை முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய சமூக ஊடகத் தளங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் டியோ சனிக்கிழமை (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தச் சர்ச்சைக்குரிய பதிவுகள், இந்தியச் சமூகத்தை தாக்குவதையும், சிங்கப்பூரின் தனித்துவமான பல்லினப் பண்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கருத்துகளைக் கொண்டிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காவல்துறை, உள்துறை அமைச்சின் கூட்டு விசாரணைகளின்படி, இந்த பாதகமிக்க உள்ளடக்கங்கள் சீனாவைத் தளமாகக் கொண்ட இணையப் பக்கம் ஒன்றிலிருந்து உருவானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதன் பின்னரே அவை மற்ற சமூக ஊடகத் தளங்களிலும், இணையப் பக்கங்களிலும் வேகமாகப் பரப்பப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்து பேசிய திருவாட்டி டியோ, அந்தத் தவறான பதிவுகளில் ஒன்று, சைனாடவுனின் பகோடா ஸ்திரீட்டில் நடைபெற்ற ஒரு சமய ஊர்வலத்தைத் தவறாகச் சித்திரித்து, சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வரவேற்பு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயன்றதாக சுட்டிக்காட்டினார்.

பகோடா ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், எதார்த்த நிலை முற்றிலும் வேறானது என்று கூறினார். 

இவை சிங்கப்பூரர்களின் கருத்துகள் அல்ல

தனது தொகுதிக்குள்ளேயே மிகக் குறுகிய தூரத்திற்குள் பௌத்த, இந்து ஆலயங்கள், பள்ளிவாசல், தேவாலயம் ஆகியவை பல ஆண்டுகளாக மிகவும் இணக்கமாகச் செயல்பட்டு வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

“இந்த காணொளிகள் சிங்கப்பூரிலிருந்து உருவானவை அல்ல; அவை சிங்கப்பூரர்களின் பன்மயக் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. பொதுமக்கள் இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பெற்றால், அவற்றை மற்றவர்களுக்குப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம்,’’ என்று கேட்டுக்கொண்டார் அமைச்சர்.

தீங்கு விளைவிக்கும் காணொளிகளை இணையத்திலிருந்து சட்டபூர்வமாக நீக்குவதைத் தாண்டி, அன்றாட வாழ்வில் மக்கள் தங்களுக்குள் நல்லுறவை வளர்த்துக் கொள்வதுதான் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்