ஹனோய்: வியட்னாம், இவ்வாண்டில் இதுவரை கண்டிராத கடும் புயலை எதிர்கொள்ள விமான நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றை மூடியதோடு கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.
வியட்னாமின் மத்திய கடற்கரைப் பகுதியை நோக்கி மணிக்கு 166 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் கஜிக்கி புயல், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) பிற்பகல் வாக்கில் கரையைக் கடப்பதற்கு முன் மேலும் வலுவடையும் என்று வியட்னாமிய வானிலை ஆய்வகம் சொன்னது.
“அது மிகவும் ஆபத்தான, வேகமாக நகரும் புயல்,” என்ற வியட்னாம் அரசாங்கம், கஜிக்கி புயலால் கனத்த மழை பெய்வதோடு வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது.
கஜிக்கி புயல், தொழிற்சாலைகள் குறைவாக உள்ள மாநிலங்களைப் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வீசிய யாகி புயலால் கிட்டத்தட்ட 300 பேர் பலியானதோடு ஏறக்குறைய $3.3 பில்லியன் டாலர் பொருட்சேதம் ஏற்பட்டது.
லாவோஸ், வட தாய்லாந்து ஆகியவற்றை நோக்கி புயல் நகரும் என்று கூறப்பட்டது.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) கரையோரப் பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக வியட்னாமிய அரசாங்கம் குறிப்பிட்டது.
மக்களை வெளியேற்றும் பணிகளில் 16,500க்கும் அதிகமான ராணுவ வீரர்களும் 107,000 துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தேடல், மீட்புப் பணிகளிலும் களமிறக்கப்படுவார்கள் என்று வியட்னாமிய அரசாங்கம் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 24ஆம் தேதி, அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவர் என்ற அரசாங்கம், படகுககளை கடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டது.
தான் ஹாவ், குவாங் பின் ஆகிய மாநிலங்களில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக வியட்னாம் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சொன்னது. வியட்னாம் ஏர்லைன்ஸ், வியெட்ஜெட் ஆகியவை மாநிலங்களுக்கு இடையிலான விமானச் சேவைகளையும் ரத்து செய்தன.
வியட்னாம் நோக்கி சென்ற கஜிக்கி புயல் அதற்கு முன் சீனாவின் ஹைனான் தீவின் தெற்குக் கரையோரத்தில் மையம் கொண்டிருந்தது. புயல் காரணமாக தீவின் சான்யா நகரில் உள்ள வர்த்தகங்களும் பொதுப் போக்குவரத்தும் மூடப்பட்டன.