கருத்துகள் எதார்த்த அடிப்படையில் அமைய வேண்டும்: மசெகவின் அலெக்ஸ் யாம்

2 mins read
‘ஜிஎஸ்டி’ குறைப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் பரிந்துரை குறித்துக் கருத்துரைப்பு
d2985b5f-d6b3-4d17-81dd-79faff61b402
மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான திரு அலெக்ஸ் யாம், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) இயூ டீ வட்டாரத் தொகுதி உலாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்க்கட்சிகள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிப்பது தொடர்பில் வேறுபட்ட பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்றாலும் பல கட்சிகள் வருங்காலத் தேவைகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவது என்று தெளிவாகக் கூறவில்லை என்று மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் அலெக்ஸ் யாம் கூறியுள்ளார்.

பொருள், சேவை வரி அதிரிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தொடர்பில் அவர் அவ்வாறு கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25), இயூ டீ வட்டாரத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் இணைந்து இரண்டு மணி நேரம் மேற்கொண்ட தொகுதி உலாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

திரு யாமும் பிரதமர் வோங்கும் இயூ டீ ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கடைத்தொகுதிகளுக்கும் மூத்தோர் பராமரிப்பு நிலையத்திற்கும் சென்றனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில், 2023, 2024ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 7 விழுக்காட்டிலிருந்து இரண்டு கட்டமாக 9 விழுக்காட்டிற்கு உயர்த்தியதை எதிர்க்கட்சிகள் குறைகூறின. பணவீக்க நெருக்கடி நிலவியதைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அவ்வாறு முடிவெடுத்ததாக அவை கூறின.

பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி), சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) மூன்றும் அந்த வரி உயர்வு மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைப் பாதித்ததாகக் கூறிய வேளையில் பிஎஸ்பியும் எஸ்டிபியும் ‘ஜிஎஸ்டி’ விகிதம் குறைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தின.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் அதிகமான கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறிய திரு அலெக்ஸ் யாம், மாற்றுப் பரிந்துரைகளுக்கு ஆகும் செலவு பற்றிப் போதிய அளவில் அக்கட்சிகள் கருத்துரைப்பதில்லை என்றார்.

வடமேற்கு வட்டார மேயருமான அவர், “அரசாங்கம் மாற்றுக் கருத்துகளுக்குச் செவிமடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் எப்போதுமே தயாராக இருக்கிறது. ஆனால் அவை அரசியல் வாதங்களாக மட்டுமன்றி எதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும், என்று கூறினார்.

மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் பிரதமர் வோங் தலைமையிலான மசெக வேட்பாளர் அணியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் ஜுஃப்ரி சலிம் தலைமையிலான அணி பொருதுகிறது.

குறிப்புச் சொற்கள்