தோ பாயோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபை ஒருங்கிணைத்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாடல்கள் முதன்முறையாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வழியாக அரங்கேறியதால் கிறிஸ்துமஸ் விழா தமிழ்ப் பண்பாட்டு வண்ணத்துடன் மிளிர்ந்தது.
‘ஒப்பில்லாப் பரிசு’ எனும் கருப்பொருளுடன் களம்கண்ட கிறிஸ்துமஸ் விழா, திருச்சபை மக்கள், மூத்தோர், பிற சமயம் சார்ந்த நண்பர்கள், இளையோர், சிறார் எனச் சமூகத்தினர் பலரை ஒன்றிணைத்தது.
இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்துக் கருத்துரைத்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், தோ பாயோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபையின் துணைப் போதகருமான மறைத்திரு ஜேசுதாஸ் சார்லஸ், இவ்விழாவைச் சமூகத்திற்கான அர்த்தமிகு கொண்டாட்டமாக மாற்றும் அம்சங்கள் குறித்துத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
‘‘இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்காக, தமிழ்க் கலாசாரத்தின் வளமையை இணைத்து, குடும்பங்கள், அண்டை வீட்டார், நண்பர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தோம்.
‘‘இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்தில் இருப்பதைப் போலவும் அவர்களை வரவேற்று, அக்கறைகொள்ளச் சமூகம் உண்டு என்பதை உணரச் செய்யவும் வேண்டும் என்பதே இலக்கு,” என்று கூறினார்.
இதற்கிடையே, விழா குறித்துப் பேசிய திருச்சபையின் உக்கிராணக்குழுத் தலைவர் யோகேஷ், எந்தச் சமயத்தவராக இருந்தாலும் இத்தகைய கொண்டாட்டத்தில் தயக்கமின்றிப் பங்கேற்க ஏதுவான சூழலைத் தரும் வகையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாகச் சொன்னார்.
இது, அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆலயம் அனைவருக்குமானது என்கிற நட்புணர்வைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வில்லுப்பாட்டு இடம்பெற்றதற்கான காரணத்தை விவரித்தார் தலைமைப் போதகர் மறைத்திரு விஜய் ஜோசஃப்.
தொடர்புடைய செய்திகள்
‘‘தமிழ் சமூகத்தின் பெருமைமிகு கலைகளில் ஒன்று வில்லுப்பாட்டு. இதன் இசைக்கு மக்கள் ஈர்க்கப்படுவது இயற்கை. அவ்வகையில் கிறிஸ்துமஸ் கதையை அதை அறியாதோரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிவித்திட வில்லுப்பாட்டிசையை ஒரு தளமாகக் கொண்டோம்,’’ என்றார் அவர்.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ் என்பது கொண்டாட்டம் மட்டுமன்று. அதன் ஆழமிகு அர்த்தம் பரிவு, ஒற்றுமை, அன்பு என்று பல விழுமியங்களைக் கொண்டது என்றார் திருச்சபையின் சாட்சியம் மற்றும் சுவிசேஷக் குழுத் தலைவர் ஜான் பீட்டர்.
‘‘மூத்தோர் தாங்கள் பாராட்டப்படுவதை உணர்ந்திடவும் இச்சமூகத்திற்கான நற்பணியில் ஈடுபட தங்களுக்கும் பங்குள்ளது என்பதில் இளையர்கள் நம்பிக்கை கொள்ளவும் குடும்பங்கள் அர்த்தமுள்ள தருணங்களை ஒன்றுகூடிச் செலவிடவும் வகைசெய்வது இந்த விழாக்காலத்தின் முக்கிய நோக்கம்.
‘‘அவ்வகையில், திரளான மக்கள் பங்கேற்ற இவ்விழா, சமூகத்திற்கிடையேயான பிணைப்பை மேலும் வலுவாக்கி, ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும்,’’ என்று நிறைவு செய்தார் திரு ஜான்.
ஆலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகளுடன் உணவும் பரிமாறப்பட்டு, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

