தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயன்படுத்தி திறன்களை மேம்படுத்திக்கொண்ட வினோத்

2 mins read
15701f16-b574-4047-a8d3-95631a537e62
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திற்கான வணிக நுண்ணறிவு உருவாக்குநராக டேஷ்போர்டு திட்டத்தில் பணிபுரியும் வினோத் நந்த குமரன். - படம்: வினோத் நந்த குமரன்

அரசாங்கம் செய்யும் அனைத்திலும் சிங்கப்பூரர்கள் மையமாக இருப்பார்கள் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையின்போது தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பங்கள் வலம் வந்தாலும் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அதற்கு அரசாங்கம் எடுக்கவுள்ள முயற்சிகளைப் பற்றி பேசிய திரு வோங் தமது உரையில், பணியின் மத்தியில் வேறொரு துறைக்கு மாறிய 41 வயதாகும் வினோத் நந்த குமாரனைக் குறிப்பிட்டார்.

முன்னர் தளவாடத் துறையிலும், தனியார் வாடகை வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்த வினோத், ஒரு காற்பந்துப் பிரியர்.

காற்பந்து விளையாட்டுகளைப் பார்க்கும்போது தனக்குப் பிடித்த காற்பந்துக் குழு எவ்வாறு போட்டியிடும் என்று அறிந்துகொள்ள போட்டியின் தரவை ஆராயத் தொடங்கினார்.

அது தரவு அறிவியில் மீதான அவரது ஆர்வத்தை தூண்டியது. இதனால் வினோத் தனது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி பயன்படுத்தி தரவு பொறியியலில் பட்டயப்படிப்பு மேற்கொண்டார்.

தற்போது அவர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக வணிகப் பகுப்பாய்வில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார்.

அதே நேரத்தில் வினோத் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வணிக நுண்ணறிவு மேம்பாட்டாளராகவும் பணியைத் தக்க வைத்துள்ளார்.

தனது பணியில் வினோத் தரவைப் பயன்படுத்தி முடிவெடுப்பதை ஆதரிக்கவும் செயல்பாடுகளை மேம்படுத்தவும் வேண்டும்.

“முதல் முறையாக நான் தேசிய தினப் பேரணி உரையைக் காண வந்துள்ளேன். இத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த மேடையில் பிரதமர் லாரன்ஸ் வோங் என் கதையைப் பகிர்ந்துகொண்டு என்னை பாராட்டியது மிகவும் நெகிழ வைத்தது. என் கதை பலருக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்,” என்று தமிழ்முரசிடம் பகிர்ந்துகொண்டார் வினோத். 

தேசிய தினப் பேரணி உரையில் கலந்துகொண்ட வினோத்.
தேசிய தினப் பேரணி உரையில் கலந்துகொண்ட வினோத். - படம்: அனுஷா செல்வமணி

வினோத்தின் பயணத்தை தமது உரையில் பாராட்டிய பிரதமர் வோங், ஒவ்வொரு ஊழியரும் பணியில் முன்னேறி, சாதிக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் பொருளியல் உத்தி என்று தெரிவித்தார்.

இதர நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் அளவில் சிறியதாக இருந்தாலும் புத்தாக்கம், புதிய யோசனைகளைக் கொண்டு வருவது போன்றவற்றில் ஒன்றுபட்ட சமுதாயமாக முன்னணியில் இருக்கும் என்று உறுதியளித்தார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்