அபராதம் செலுத்தப்படாத வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகன ஓட்டிகள், நவம்பர் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான வாகன நுழைவு அனுமதிக்கு (விஇபி) விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியாது.
சிங்கப்பூரில் செய்த போக்குவரத்து, வாகன நிறுத்தம் அல்லது வாகனப் புகை உமிழ்வு விதிமீறல்களுக்காகச் செலுத்தப்படாத அபராதங்களைக் கொண்ட வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகன நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பு தங்கள் அபராதங்களைச் செலுத்த வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் உள்துறை அமைச்சும் வெள்ளிக்கிழமையன்று (மே 15) தனித்தனி ஃபேஸ்புக் பதிவுகளில் தெரிவித்துள்ளன.
தற்போதுள்ள நடைமுறையிலிருந்து இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அதன்படி, அபராதம் செலுத்தப்படாத வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகன ஓட்டிகள் தரைவழிச் சோதனைச் சாவடிகளுக்கு வரும்போது மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய மறுக்கப்படலாம் என்று அந்த இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு செல்லுபடியாகும் விஇபி வைத்திருக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் செலுத்தப்படாத அபராதங்களை www.axs.com.sg என்ற இணையத்தளத்தில் சரிபார்க்கலாம்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் OneMotoring இணையத்தளத்தில் தங்கள் விஇபிக்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பும், சிங்கப்பூருக்குப் பயணம் செய்வதற்கு முன்பும் அவர்கள் அபராதங்களைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்த இரு அமைப்புகளும் தெரிவித்தன.
AXS இணையத்தளம் மற்றும் கைப்பேசிச் செயலி போன்றவை மூலம் அபராதங்களைச் செலுத்தலாம்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் உள்துறை அமைச்சும், வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தாங்கள் நுழைய விரும்பும் தேதிக்குக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே தங்களது விஇபி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நினைவூட்டின. பணம் செலுத்துவதற்கான செயலாக்கத்திற்கும், பதிவுகளைப் புதுப்பிப்பதற்கும் இரண்டு நாள்கள் வரை ஆகலாம் என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மலேசியாவில் செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களைக் கொண்ட சிங்கப்பூர் வாகன ஓட்டிகள், மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன்பு அந்த அபராதங்களைச் செலுத்திவிட வேண்டும் என்றும் அவை அறிவுறுத்தின.
2024ஆம் ஆண்டில், மலேசியாவில் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைக் கொண்ட வெளிநாட்டு வாகன ஓட்டிகளில் சிங்கப்பூரர்களே மிகப்பெரிய பிரிவினராக இருந்தனர். அவர்கள் சுமார் 3.5 மில்லியன் ரிங்கிட் (S$1 மில்லியன்) அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
1990 முதல் ஜூன் 2024 வரை சிங்கப்பூர், புருணை, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட 51,128 நிலுவையில் உள்ள போக்குவரத்து அழைப்பாணைகளில், 35,011 அழைப்பாணைகள் சிங்கப்பூரர்களால் பெறப்பட்டவை என உத்துசான் மலேசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

