தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருநாட்டுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப இஸ்ரேல், பாலஸ்தீன ஆணையத்துக்கு விவியன் அறைகூவல்

2 mins read
2a4b6016-1b21-4730-aadf-1f33c8e5e207
பாலஸ்தீன ஆணைய வெளியுறவு அமைச்சர் வர்சென் அகாபெகியன் ஷாஹினுடனும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் மோஷே ச’ஆருடனும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

அமைதிக்கு ‘ஒரே சாத்தியமான வழி’யான இருநாட்டுத் தீர்வு குறித்த நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்படி இஸ்ரேலிடமும் பாலஸ்தீன ஆணையத்திடமும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலஸ்தீன ஆணைய வெளியுறவு அமைச்சர் வர்சென் அகாபெகியன் ஷாஹினுடன் செவ்வாய்க்கிழமையும் (செப்டம்பர் 9) இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் மோஷே ச’ஆருடன் புதன்கிழமையும் டாக்டர் விவியன் பேசியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இரு அமைச்சர்களுடனும் ‘வெளிப்படையாகவும் ஒளிவுமறைவின்றியும்’ நடத்திய பேச்சுவார்த்தையில், காஸாவில் மோசமடைந்துவரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சிங்கப்பூரின் ‘மிகப் பெரிய கவலையை’ டாக்டர் விவியன் வெளிப்படுத்தினார்.

மேலும், உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவும் அனைத்துப் பிணைக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் இருநாட்டுத் தீர்வு மட்டுமே இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்திற்கு ஒரு ‘விரிவான, நியாயமான, நீடித்த தீர்வை’ வழங்கும் என்ற சிங்கப்பூரின் உறுதியான நிலைப்பாட்டை டாக்டர் விவியன் மீண்டும் வலியுறுத்தினார்.

டாக்டர் அகாபெகியனுடன் பேசியபோது, பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய, சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் உரிமைக்கு சிங்கப்பூர் நீண்டகாலமாக அளித்துவரும் ஆதரவை டாக்டர் விவியன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கான அனைத்துலக நிவாரண முயற்சிகளுக்கு பங்களிப்பதில் சிங்கப்பூரின் கடப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். இதில், $22 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள ஒன்பது பகுதிகளாக வழங்கப்பட்ட உதவிகளும் வான்வழி விநியோகிக்கப்பட்ட பல மனிதாபிமான உதவிகளும் அடங்கும். ஆக அண்மையில், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை சி-130 வகை விமானம் ஜோர்தானுக்கு அனுப்பப்பட்டது.

டாக்டர் அகாபெகியன், சுதந்திர நாடாவதற்கு மக்களைத் தயார்ப்படுத்த பாலஸ்தீன ஆணையத்தின் முயற்சிகளுக்கு உதவியது உட்பட சிங்கப்பூரின் உதவிக்கு நன்றி கூறினார்.

திரு ச’ஆர் உடனான உரையாடலில், காஸாவில் விரிவடைந்து வரும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூரின் ‘மிகுந்த கவலையை’ டாக்டர் விவியன் வெளிப்படுத்தினார்.

2023 அக்டோபர் 7ல் ஹமாசின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதை டாக்டர் விவியன் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், ‘அதிகப்படியான ராணுவ நடவடிக்கை’ காஸாவில் பொதுமக்களின் துன்பத்தை மோசமடையச் செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், மனிதாபிமான உதவிகள் ‘உடனடியாக, விரைவாக, தடையின்றி’ வழங்கப்படுவதை ஒருங்கிணைக்குமாறு இஸ்ரேலிடம் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இருநாட்டுத் தீர்வுக்கான சாத்தியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலிடம் டாக்டர் விவியன் வலியுறுத்திக் கூறினார்.

தோஹாவில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல், கத்தாரின் இறையாண்மையை மீறுவதாகவும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளுக்கும் பங்கம் விளைவிப்பதாகவும் சிங்கப்பூரின் கருத்தை டாக்டர் விவியன் மீண்டும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்