அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சிங்கப்பூர், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும், பாரம்பரிய நட்பு நாடுகளுடன் புதிய உறவுகளை விரிவுபடுத்தவும் இலக்கு கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘மில்க்கன் இன்ஸ்டிடியூட் ஆசிய உச்சநிலை மாநாடு 2026’ல் புதன்கிழமை (அக்டோபர் 7) அமைச்சர் விவியன் பேசினார்.
ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்றவற்றுடன் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, பசிபிக் தீவு நாடுகளுடனும் ஆசியான் கூட்டணியை வலுப்படுத்தச் சிங்கப்பூர் முயற்சி செய்யும் என்றார்.
ஆசியானின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, மேலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக வேண்டும். அத்துடன் எரிசக்தி, தொழில்நுட்பம் போன்ற அதன் பலங்கள் ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்த அமைப்பாக அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் நிலையை அடைவதே, சிங்கப்பூரின் தலைமைப் பொறுப்பின் வெற்றியாகக் கருதப்படும் என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
உலகளாவிய விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்து வரும் நிலையில், நடுத்தர, சிறிய நாடுகள் அமைதி காத்து பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளியலாக விளங்குகின்றன. வல்லரசுகளின் போட்டியாகவோஅல்லது மறைமுகப் போர்களுக்கான இடமாகவோ இல்லாமல், சுய பலத்தின் அடிப்படையில் ஆசியான் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
புவிசார் அரசியல் சூழல் சவாலாக இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இவ்வட்டார நாடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வியட்னாம் 8 விழுக்காட்டுக்கு மேலாகவும், சிங்கப்பூர் 6.1 விழுக்காடாகவும், மலேசியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளும் 5 விழுக்காட்டுக்கு மேலாகவும் வளர்ச்சியடைந்துள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் மிகப்பெரிய வணிகப் பங்காளியாக இருந்த சீனாவைப் பின்தள்ளி தைவான் முதலிடத்தைப் பிடித்தது. செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி துறைகளின் வளர்ச்சியே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனைப் புதிய பொற்காலத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் விவியன், தற்போதைய சூழலைக் கடந்த காலத் தொழில்புரட்சியுடன் ஒப்பிட்டார். அக்காலத்தில் ரயில்வே துறை எவ்வாறு பெரும் முதலீடாகவும் அதே வேளையில் அதிக ஏற்ற இறக்கங்கள் நிறைந்த துறையாகவும் இருந்ததோ, அதுபோலவே இப்போதைய தொழில்நுட்ப மாற்றங்களும் அமையும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), உயிரியல் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அனைத்துலகத் தரநிலைகளை அமைக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும். இது பெரும் வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்த காலம் என்றும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
