அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் சிங்கப்பூருக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சிறிய, திறந்த பொருளியலாக சிங்கப்பூர் இருப்பதால் வரி அதிகரிப்பின் காரணமாக அதற்கு மறைமுகத் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.
அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 2004ஆம் ஆண்டிலிருந்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளதை அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பு காரணமாக சிங்கப்பூருக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இருப்பினும், சிங்கப்பூர் தொடர்ந்து கவனமாக இருக்கவேண்டும் என்றும் பொருளியல் நிலவரம் மோசமடைந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று அமைச்சர் விவியன் தெரிவித்தார்.
சிறிய, திறந்த பொருளியலாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட வர்த்தகம் மும்மடங்கு அதிகமாக உள்ளது.
எனவே, ஏதேனும் விரிசல் ஏற்பட்டாலோ பொருளியல் ஒருங்கிணைப்பு, உலகளாவிய விநியோகச் சங்கிலி, உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டாலோ சிங்கப்பூருக்கு மறைமுகத் தாக்கங்களை அவை ஏற்படுத்தும் என்றார் அவர்.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் நீல் பரேக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விவியனின் உரை அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
சில நாடுகள் மீது அமெரிக்கா அதிகளவில் வரி விதித்திருப்பது குறித்து திரு பரேக் கேள்வி எழுப்பியிருந்தார்.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை முதல் (பிப்ரவரி 4) நடப்புக்கு வந்துள்ளது.
மெக்சிகோ, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் தமது முடிவை மாற்றிக்கொண்ட அதிபர் டிரம்ப், அந்த இருநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 விழுக்காடு வரி விதிப்பதை ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் அதிபர் டிரம்ப்புடன் அணுக்கமாகச் செயல்பட சிங்கப்பூர் ஆவலுடன் இருப்பதாகவும் அமைச்சர் விவியன் கூறினார். சேவைத்துறையைப் பொறுத்தவரை சிங்கப்பூருடன் ஆக அதிகமான வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிப்பதை அவர் சுட்டினார்.

