விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் மத்திய கிழக்கிற்குப் பயணம்

விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் மத்திய கிழக்கிற்குப் பயணம்

2 mins read
15379f15-0b2c-4582-a8d6-296fb3005a0b
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன், மத்திய கிழக்கிற்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். சனிக்கிழமை (மே 2) தொடங்கி, செவ்வாய்க்கிழமை (மே 5) வரை அவர் அங்கிருப்பார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு டாக்டர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் செல்வார்.

வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, அந்நாடுகளுடன் சிங்கப்பூர் கட்டிக்காத்துவரும் நீண்டகால உறவை மறுஉறுதிப்படுத்துவதே அவரது பயணத்தின் நோக்கம்.

அந்த வட்டாரத்தில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த உதவியதற்காக அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் சந்திப்பின்போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்கள் வெளியேறுவதற்குத் துணைநின்றதற்காகவும் அவர்களை அமைச்சர் பாராட்டுவார் என்று வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (மே 1) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

மத்திய கிழக்கு நிலவரம் பற்றி அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் தலைவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார். பதற்றத்தைத் தணிப்பதன் முக்கியத்துவம், நீடித்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்வது உட்பட அனைத்துலகச் சட்டங்களை நிலைநிறுத்தல் முதலிய அம்சங்கள் குறித்து அவர் பேசுவார்.

நான்கு நாடுகளுடனும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வழிவகைகள் பற்றியும் அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் விவாதிப்பார். எரிசக்திப் பாதுகாப்பு, விநியோக நடவடிக்கைகளின் மீள்திறன், வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகள் போன்றவற்றில் அவரின் பேச்சு கவனம் செலுத்தும்.

டாக்டர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனுடன் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் மத்திய கிழக்கிற்குச் செல்வர்.  

குறிப்புச் சொற்கள்