சிங்கப்பூரில் இயங்கும் புகழ்பெற்ற ஜப்பானிய சில்லறை வர்த்தகக் கடையான ‘டொன்டொன் டொன்கி’ நிறுவனம், குப்பிகளில் அடைக்கப்பட்டு வாயினால் உறிஞ்சி இழுக்கப்படும் ஒருவகை காற்றுத் தனிமம் உள்ளடங்கிய சாதனத்தை விற்பனையில் இருந்து மீட்டுக்கொண்டுள்ளது.
ஒருவரின் குரலை மேம்படுத்த உதவும் அச்சாதனத்தின் பாதுகாப்புத் தரநிலைகளை நடப்பில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்ய மறுசீராய்வுக்காக அவை மீட்டுக்கொள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை ஜப்பானிய நிறுவனம் தன்னிச்சையாக எடுத்துள்ளதாக சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் (CCS) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தெரிவித்துள்ளது.
ஒரு ஹீலியம் குப்பி $19.90 என்ற விலையில் அக்கடையில் அவை விற்பனை செய்யப்பட்டன. ஒரு குப்பியில் சுமார் 11.6 லிட்டர் அளவு ஹீலியம் வாயு கலவை இருக்கும். அதனை உள்ளிழுக்கும் போது, ஒருவரின் குரல் ‘கீச்சொலியுடன்’ கேட்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
சாதனத்தின் படங்களில் அது 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு உகந்தது என்று இருந்தது. காற்றை அவசரமாக உள்ளிழுப்போருக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் அதில் இருந்தது. படுகாயம், மூச்சுத் திணறல், அல்லது மரணம் ஏற்படலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவரும் அதன் பயனீட்டாளர் சாதன பாதுகாப்பு அலுவலகத்துக்கு (CPSO) புகார் அளிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் சாதனங்கள் நடப்பில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளின்படி தயாரிக்கப்படவில்லை எனில், அவற்றை விநியோகிப்பவர்கள் விற்பனை செய்வதில் இருந்து தம்மால் தடை செய்யமுடியும் என்று ஆணையம் கூறியது.
ஹீலியம் பொதுவாக ‘பலூன்’களில் காற்று நிரப்பப் பயன்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“மருத்துவ மேற்பார்வையின்றி ஹீலியம் காற்றை பயன்படுத்துதல் உயிருக்கே ஆபத்தானது,” என்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் சுவாசப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிலிப் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கருத்துரைத்தார்.
டொன்டொன் டொன்கி கடை முதலில் 2017ஆம் ஆண்டு ஆர்ச்சர்ட் ரோட்டில் திறக்கப்பட்டது.

