தோ பாயோவில் மறதிநோயாளிகள், பராமரிப்பாளர்கள் சமூக ஆதரவு நிலையம்

தோ பாயோவில் மறதிநோயாளிகள், பராமரிப்பாளர்கள் சமூக ஆதரவு நிலையம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Oct 2026 - 8:20 pm

2 mins read

‘டிமென்ஷியா’ எனப்படும் மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்போருக்கு உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய நிலையம் ஒன்று தோ பாயோவில் திறக்கப்பட்டுள்ளது.

‘வாய்சஸ் ஃபார் ஹோப் சென்டர்’ என்னும் அந்த நிலையம் தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான சீ ஹொங் டாட் சனிக்கிழமை (அக்டோபர் 3) அதனை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

திரு சீ, அந்தக் குழுத்தொகுதியின் தோ பாயோ வெஸ்ட் - தாம்சன் பிரிவைப் பிரதிநிதிக்கிறார்.

புதிய ஆதரவு நிலையம் பற்றிக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரின் முதலாவது ‘சிறந்த முறையில் முதியோர் வாழும் குடியிருப்புப் பேட்டை’ திட்டத்தின்கீழ் உள்ள தனது தொகுதியில் இந்த நிலையம் அமைந்திருப்பது மிகவும் அர்த்தமுள்ள ஒன்று என்றார்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதியோருக்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில் மறதிநோயாளிகளுக்கு வசதியளிக்கும் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்பின் ஆலோசனையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் குடியிருக்கும் புளோக்குகளை எளிதில் அடையாளம் காண உதவும் வகையில், தோ பாயோவின் சில பகுதிகளில் பெரிய எண்களுடன் தனித்துவமான, வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை உதாரணமாகச் சுட்டினார் அமைச்சர்.

அதேபோல, முதியோரும் மறதிநோயாளிகளும் பேருந்து நிலையத்திற்கு எளிதாகச் செல்ல உதவும் வகையில், தோ பாயோ பேருந்து நிலையத்தில் பாலர் பருவ விளையாட்டுகளை வண்ணமயமாகக் காட்டும் விளக்கப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்களின் எண்ணிக்கை 21 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதால், சிங்கப்பூர் தற்போது மூப்படைந்த சமூகமாக மாறியுள்ளது. எனவே, மறதிநோயாளிகளுக்கு ஏதுவான நாட்டை உருவாக்க வேண்டியது முக்கியம்,” என்று திரு சீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்