இவ்வாண்டிற்கான ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் (எஸ்ஏஎஃப்) தொண்டூழியர் படைப்பிரிவு முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நேரடியாகக் களப்பணியில் இணைந்தது.
முன்னேற்ற ஆதரவுக் குழுவின் ஒரு பகுதியான இவர்களின் பங்கேற்பு, முக்கியமான ஆதரவுப் பொறுப்புகளைச் சுமந்து, வழக்கமாக மற்ற பணிகளில் ஈடுபடும் படைவீரர்களுக்கு போர்ப் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பளித்தது.
முன்னேற்ற ஆதரவுக் குழுவின் செயல்பாட்டு மேலாண்மைப் பிரிவில் பணிபுரியும் 51 வயது இரண்டாம் எஸ்ஏஎஃப் தொண்டூழியர் ராஜீவ் திவாகரன் நாயர், தமது பத்தாண்டுத் தன்னார்வச் சேவையின் அனுபவம் குறித்தும் வெளிநாட்டுப் பயிற்சியில் இணைவதற்கான உந்துதல் குறித்தும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
“இது ஒரு தன்னார்வலராகப் பங்களிக்கவும் தேசிய சேவையாளர்கள், முழு நேர தேசிய சேவையாளர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரை ஆதரிக்கவும் கிடைத்த அரிய வாய்ப்பு. எனவே, எனக்கு இது ஒரு சிறந்த அனுபவம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் கடல்சார் பொறியியல் நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர், அப்பயிற்சியில் காணப்படும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றியும் குறிப்பிட்டார்.
“நவீன, ஒருங்கிணைந்த, பல கள சிங்கப்பூர் ஆயுதப்படை ஒருமிதமாக இயங்குவதை நீங்கள் இங்கே காணலாம். ராணுவம், ஆகாயப்படை, பாதுகாப்புத் தொழில்நுட்பச் சமூகம், தொண்டூழியர் படைப்பிரிவு ஆகியவை ஒரே அணியாகச் செயல்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கது,” என்று திரு ராஜீவ் கூறினார்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியரான மூன்றாம் எஸ்ஏஎஃப் தொண்டூழியர் ஸ்டெஃபனி கிரேஸ் கிருஷ்ணன், 52, டில்பால் முகாமில் துணைப் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிவதை அர்த்தமிக்கதாகக் கருதுகிறார்.
“அத்தியாவசிய வேலைப் பதவிகளை நிரப்ப நாங்கள் உதவுகிறோம். இதன்வழி படைவீரர்கள் போர் தொடர்பான நடவடிக்கைகளிலும் பயிற்சிகளிலும் ஈடுபட வழிவகுக்கிறது,” என்றார் திருவாட்டி ஸ்டெஃபனி. சிங்கப்பூரிலுள்ள ஒரு தரவுப் பகுப்பாய்வு நிறுவனத்தின் உதவி துணைத் தலைவராக அவர் பணியாற்றுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இந்திய கணவரைக் கொண்டுள்ள இவரது பொறுப்புணர்வு, தமக்குப் பலவற்றை தந்துள்ள தேசத்திற்கு மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வருவதாக அவர் சொன்னார்.
தம்முடைய சொந்த மண்ணில் பணியாற்றுவது இந்தப் பெருமைக்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்ப்பதாக குறிப்பிட்ட திருவாட்டி ஸ்டெஃபனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என இரண்டு நாடுகளையும் தமது வீடாகக் கருதுவதாக கூறினார்.
“சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஓர் அங்கமாக சிங்கப்பூரின் தற்காப்பிற்குப் பங்களிப்பது உண்மையிலேயே செறிவூட்டும், மனநிறைவளிக்கும் அனுபவமாக இருந்துள்ளது,” என்றார் அவர்.

