சமூக மன்றங்களில் தொண்டூழியம் ஆற்றுவதன் மூலம் தம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டார் ஸெங்குவா சமூக மன்றத்தின் நிர்வாக குழுத்தலைவர் செல்வராணி பன்னீர்செல்வம்.
சமூக நிலையங்கள், மன்றங்களுக்கான நிர்வாகக் குழுக்கள் திங்கட்கிழமை (நவம்பர் 4) தங்களது 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியபோது, கடமையுணர்வாலும் ஆர்வத்தாலும் அடித்தள முயற்சிகளுக்கு உயிரூட்டும் தொண்டூழியர்களை அங்கீகரிக்க விரும்பியதாகக் குறிப்பிட்டன.
அத்தகையோரில் ஒருவர், புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தைச் சேர்ந்த திருவாட்டி செல்வராணி பன்னீர்செல்வம். 25 ஆண்டுகளுக்குமேல் தொண்டூழியராகப் பணியாற்றும் திருவாட்டி ராணி, வட்டாரவாசிகளின் வாழ்வியலுக்குச் செறிவூட்டும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
பிற வட்டாரவாசிகளுடனும் சக மனிதர்களுடனும் இணைவதே தங்கள் முயற்சிகள் அனைத்திற்குமான மையக்கரு என்று அவர் கூறினார்.
தாமான் ஜூரோங் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த திருவாட்டி ராணி, 14 வயதில் கல்வி உதவித்தாெகையை தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் பெற்றபோது தொண்டூழியர்களால் உற்சாகம் அடைந்ததை நினைவுகூர்ந்தார்.
1996ல் திருமணம் செய்த பிறகு புக்கிட் பாஞ்சாங்கிற்குக் குடிபெயர்ந்த திருவாட்டி ராணி, பிறகு ஸெங்குவா சமூக மன்றத்தின் இளையர் மன்றத்திலும் 32 வயதை எட்டியபின் மாதர் சங்கத்திலும் பணியாற்றினார்.
தளவாட நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள திருவாட்டி ராணி, கணவர், ஐந்து பிள்ளைகள் எனப் பெரியதொரு குடும்பத்தைச் சேர்ந்தவர். எல்லாப் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றுவதற்கு நேரத்தைத் தகுந்தவாறு சமாளிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.
“நேரத்தைச் சரியாகச் சமாளித்தால், நான் எனது வேலைகளைக் குறையின்றிச் செய்து முடிப்பேன். மக்கள் கழகத்தின் தேசிய சமூக தலைமைத்துவ நிலையத்தில் (National Community Leadership Institute) நேரத்தைச் சமாளிப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொண்டதால் நேர விரயத்தைக் குறைப்பேன்,” என்று அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வசதி குறைந்த பிள்ளைகளுக்குப் பரிசு அளித்தபோது அப்பிள்ளைகளில் ஒருவர், “நீங்கள்தான் என் சான்டாகிளாஸ்”, எனக் கூறியது மறக்க முடியாத தருணம் எனத் திருவாட்டி ராணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“அந்தச் சிறுவன் இப்போது 18 வயது இளையராக உள்ளார். ஓரிரு முறை அவரை வெளியில் பார்த்தபோது என்னைப் பார்த்து சிரிப்பார்,” என்று அவர் கூறினார்.
தமது பொறுப்பில் இருந்துகொண்டே இனியும் சமூகத்துடன் புதிய இணைப்புகளை உருவாக்க திருவாட்டி ராணி விரும்புகிறார். மூத்தவர்களுக்கான ‘கோல்டன் ஸூம்பா’ போன்ற உடற்பயிற்சித் திட்டங்களை அண்மையில் தொடங்கிய அவர், பல தலைமுறை நடவடிக்கைகளில் பங்கேற்க இளையர்களை ஊக்குவிக்கிறார்.

