பூன் லே டிரைவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டைச் சுத்தம் செய்யத் தொண்டூழிய நிறுவனம் ஒன்றின் உதவியைப் பெண் ஒருவர் நாடினார்.
அந்த வீட்டில், அப்பெண்ணின் 76 வயதுத் தாயார் திருவாட்டி குவோ, பல ஆண்டுகளாகத் தேவைக்கு அதிகமான பொருள்களைச் சேமித்து வைத்திருந்தார்.
தமது கணவரும் தாமும் ஐந்தறைகள் கொண்ட அந்தக் குடியிருப்பில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்துவருவதாகத் திருவாட்டி குவோ, ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
தங்கள் பிள்ளைகள் அவரவர்க்கெனக் குடும்பம் அமைந்தவுடன் அக்குடியிருப்பைவிட்டு 10 ஆண்டுகளுக்குமுன் சென்றதாகக் கூறிய அவர், தன்னால் சுத்தம் செய்ய முடியாததால் வீட்டில் பொருள்கள் குவிந்துகொண்டே இருந்தன என்றார்.
திருவாட்டி குவோவின் மகள் தமது தாயாருடன் இவ்வாண்டின் சீனப் புத்தாண்டைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்.
அதனால், வீட்டைச் சுத்தம் செய்ய முடிவுசெய்த அவர், அங் மோ கியோ உயர்நிலைப் பள்ளியின் ‘சோசியல் மூவ்’ எனும் தொண்டூழிய நிறுவனத்தை நாடியதாகக் கூறப்படுகிறது.
வீட்டைச் சுத்தம் செய்வதற்குச் சம்மதம் பெற, யாரோ ஒருவர் அனைத்துப் பொருள்களையும் கிட்டத்தட்ட S$1,000க்கு வாங்கச் சம்மதித்துள்ளதாகத் திருவாட்டி குவோவிடம் அவரது மகள் பொய்யுரைத்தார்.
ஜனவரி 4ஆம் தேதி, தொண்டூழியர்கள் 60 பேருடன் குடியிருப்பைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் களமிறங்கிய ‘சோசியல் மூவ்’, கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் செலவிட்டு அப்பணியை முடித்தது.
தொடர்புடைய செய்திகள்
தேவைக்கு அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்களால் குப்பை மேடாகக் காட்சியளித்த வீட்டைப் பாதுகாப்பான வாழ்விடமாக மாற்றிவிட்டதாக ஃபேஸ்புக் பதிவில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

