எளிய பின்புலம் கொண்ட எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: ரவி ஃபிலமன்

2 mins read
fb75df82-072e-443a-91cc-5093a183a038
எந்தப் பதவியுமின்றி தங்களால் இவ்வளவு உதவிகள் செய்யமுடியுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் வாய்ப்பு கிடைத்தால் எங்களால் இன்னும் வலுவாகக் குரல் கொடுக்க முடியும் என்றார் ரவி ஃபிலமன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்கள் கட்சி வேட்பாளர்கள் அரசாங்கச் சேவையாளர்களோ, நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பெரும் பின்னணியைக் கொண்டவர்களோ அல்ல என்றும், மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும் கூறி தங்கள் கட்சிக்கு வாக்குக் கேட்டார் இரவிச்சந்திரன் ஃபிலமன்.

ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதிக்கான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைச் செயலாளரான திரு ரவி இவ்வாறு சொன்னார்.

ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி வேட்பாளரான லியானா தமிராவைச் சந்தித்தபோது அவர் வீடின்றி இருந்ததையும், நிஸார் சுபைர் கடற்துறைப் பணியிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு, அன்றாடச் செலவுகளுக்காக இருவேறு பணிகள் மேற்கொண்டிருந்ததையும் அவர் சுட்டினார்.

மில்லியன் வெள்ளியில் சம்பளம் வாங்கும் அமைச்சர்கள் எளிய மக்களின் சிரமங்களை அறிந்து செயல்படுவார்களா எனவும் திரு ரவி கேள்வியெழுப்பினார்.

கொள்கைப்பிடிப்புடனும், நம்பகத்தன்மையுடனும் செயல்படவேண்டிய மூத்த அமைச்சரான லீ, தமது அமைச்சரவையில் இருந்தோரது திருமணத்தைத் தாண்டிய உறவு குறித்து முன்னரே கூறாதது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் டேவிட் ஃபூ, “சிங்கப்பூர் யாருக்கானது ? தாதியர், உணவங்காடிக் கடைக்காரர், வேலைக்குச் செல்லக் காத்திருக்கும் பட்டதாரிகள் போன்றோருக்கானதா ? அல்லது ஏற்கெனவே பெரும் வசதியுடன் வாழ்பவர்களுக்கானதா,” எனக் கேள்வி எழுப்பினார்.

“குறைந்துவரும் மொத்த கருத்தரிப்பு விகிதத்திற்கு குழந்தை போனஸ் திட்டம் மட்டும் போதாது. வேலை பாதுகாப்பு, விலைவாசி குறித்த மன அழுத்தம் குறைக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

அச்சத்தை மாற்றி நம்பிக்கையுடன் எதிர்க்கட்சிக்கு வாக்களியுங்கள் எனக் கேட்டுக்கொண்ட கலா மாணிக்கம், “எதிர்க்கட்சிகள் அதிகம் இருந்தால் அரசாங்கச் செயல்பாடுகள் வலிமை பெரும்,” என்றார்.

16 வயது மகளுக்கு ஒற்றைத் தாய் பெற்றோராகத் பல்வேறு சிரமங்களைக் கடந்து, வேட்பாளராகத் தாம் தேர்தலில் நிற்பதைச் சுட்டிய அவர், தன்னால் பிறர் படும் சிரமங்களை நன்கறிய முடியுமென்றார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி வேட்பாளர் ‌‌ஷரத் குமார், “அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் கூரையுடன் கூடிய நடைபாதைகளுக்கு வகை செய்துள்ளார். வாழ்வில் வீசும் பிற புயல்களிலிருந்து காக்க வகை செய்யவில்லை,” என்றார்.

மசெக வேட்பாளர் எட்வர்ட் சியா, மாத வருமானத்தில் 0.1 விழுக்காடு மட்டுமே உணவங்காடி நிலைய உணவுக்குச் செல்வதாகக் கூறியதைக் குறிப்பிட்ட நிஸார் சுபைர், “எங்களுக்கு வீடு, கடன்கள் உள்ளிட்ட இன்ன பிற செலவுகளும் உண்டு,” என்றார்.

குறிப்புச் சொற்கள்