பொதுத் தேர்தலில் போட்டியிடும் எட்டு அரசியல் கட்சிகளின் இரண்டாம் சுற்றுப் பிரசாரச் செய்திகள் வியாழக்கிழமை (மே 1) தொலைக்காட்சியிலும் வானொலியிலும் ஒலி, ஒளிபரப்பாயின.
அதில், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சார்பாக அதன் உறுப்பினர் அரிஃபின் ஷா கலந்துகொண்டார்.
அவர், இந்தப் பொதுத் தேர்தலில் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதிக்கான வேட்பாளர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தமது கட்சி போட்டியிடும் மார்சிலிங் - இயூ டீ, செம்பவாங் குழுத்தொகுதிகளிலும் புக்கிட் பாஞ்சாங், செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதிகளிலும் வசிக்கும் வாக்காளர்கள், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கத் தங்கள் கட்சியினருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மே 3ஆம் தேதி ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் தாங்கள் செவிமடுக்கப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
சுகாதாரம், வீடமைப்பு, மக்கள்தொகை, பொருளியல், பருவநிலை மாற்றம் போன்ற அம்சங்கள் தொடர்பான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறிய திரு அரிஃபின் ஷா, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தத் தங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பொதுத் தேர்தல் 2025ல் தங்கள் கட்சி வேட்பாளர்கள் 11 பேர் மட்டுமே போட்டியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆனாலும் நாடாளுமன்றத்தில் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகள், கேள்விகளைத் தாங்கள் முன்வைப்போம் என்றும் மக்கள் அனைவருக்கும் நன்மை ஏற்படுத்தும் கொள்கை மாற்றங்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் உறுதியளித்தார்.
தாங்கள் வெற்றி பெற்று நகர மன்ற நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்றால், குடியிருப்பாளர்கள் நகர மன்றத்துக்குச் செலுத்தும் கட்டணம் சரியான வழியில் செலவு செய்யப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலம் நன்றாக அமைய சிங்கப்பூரர்கள் பயமின்றி வாக்களிக்கலாம். எனவே மாற்றத்துக்கு வாக்களியுங்கள். சிங்கப்பூரர்கள் வளமாக வாழச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று திரு அரிஃபின் ஷா கேட்டுக்கொண்டார்.