சிங்கப்பூர் வாக்காளர் பதிவேடு, ஜூன் 1, 2024 நிலவரப்படி தகுதியான அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் கொண்டிருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (ஜூன் 19) முதல் ஜூலை 2 வரை பொதுமக்களின் பார்வைக்கு அது வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு நவம்பருக்குள் நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தல், இவ்வாண்டு செப்டம்பரிலேயே நடைபெறலாம் என்ற ஊகம் நிலவிவரும் வேளையில் வாக்காளர் பதிவேட்டைப் புதுப்பிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
வாக்காளர் பதிவேடு புதுப்பிக்கப்பட்டதை செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அறிவித்த தேர்தல் துறை, சிங்கப்பூர் குடிமக்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் தங்கள் விவரங்களை தேர்தல் துறை இணையத்தளத்தில் ‘வாக்காளர் சேவைகள்’ வழியாக மின்னணு முறையில் சரிபார்க்கலாம் என்றது. அல்லது, சிங்பாஸ் கைப்பேசிச் செயலியில் ‘என் சுயவிவரம்’ (My Profile) கீழ் விவரங்களை சரிபார்க்கலாம் என்று அது கூறியது.
தங்களது பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது தங்களது விவரங்கள் சிங்கப்பூர் அடையாள அட்டையில் உள்ளதிலிருந்து வேறுபட்டு இருந்தால், ஜூலை 2ஆம் தேதி வரை குடிமக்கள் தங்களது கோரிக்கையைத் தாக்கல் செய்யலாம்.
ஒருவர் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக, சிங்கப்பூர் குடியிருப்பு முகவரி அல்லது தொடர்புகொள்ளக்கூடிய உள்ளூர் முகவரி கொண்டிருப்பதுடன், எழுத்துபூர்வமான எந்தவொரு சட்டத்தின்கீழ் வாக்காளராகத் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்றால், அவர் வாக்களிக்க தகுதியுடையவர்.
கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் தனது இணையப்பக்கம் மூலம் அல்லது தனது அலுவலகம், நாடு முழுவதும் உள்ள 110 சமூக மன்றங்கள் அல்லது நிலையங்கள், சர்வீஸ்எஸ்ஜி நிலையங்கள், மற்றும் வெளிநாட்டுப் பதிவு மையங்களாக சேவையாற்றும் 10 சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் துறை கூறியது.
இதற்கிடையே, முந்தைய தேர்தலில் வாக்களிக்கத் தவறியதற்காக பதிவேடுகளிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், தங்கள் பெயர்களை மீண்டும் இடம்பெறச் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் துறை கூறியது. தேர்தல் துறை இணையப்பக்கத்தில் உள்ள ‘வாக்காளர் சேவைகள்’ பகுதியில் இதைச் செய்ய முடியும்.