பொதுத் தேர்தலை முன்னிட்டு வியாழக்கிழமை (மே 1) இரவு நடைபெற்ற கட்சி அரசியல் ஒலிபரப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) சார்பாக திரு சி. நல்லகருப்பன் தமிழ்மொழியில் உரையாற்றினார்.
இவர் சுவா சூ காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்களில் ஒருவர்.
மே 3ல் வாக்காளர் எடுக்கும் முடிவு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றார் அவர்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நியாயமான வருமானத்தை ஊழியர்கள் பெறுவது, 28 வயதில் கட்டுப்படியான விலையில் வீடு வாங்குவது, தொடக்கநிலை இறுதித் தேர்வு எழுதாதிருக்க மாணவர்களுக்குத் தெரிவு வழங்கப்படுவது போன்றவை வாக்காளர்களின் கைகளில் உள்ளதாக திரு நல்லகருப்பன் கூறினார்.
பொருளியல் வளர்ச்சியால் சிங்கப்பூரர்கள் அனைவரும் சமமான முறையில் அனுகூலம் பெறுவதும் பெறாததும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்திருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கொள்கைப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு சிங்கப்பூரர்களின் ஆதரவு தேவை என்று திரு நல்லகருப்பன் குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சி மீண்டும் அரசாங்கம் அமைக்கும் என்று கூறிய திரு நல்லகருப்பன், மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதியில் அக்கட்சியை எதிர்த்து யாரும் போட்டியிடாததை அடுத்து அது தேர்தலுக்கு முன்னதாகவே ஐந்து இடங்களை வென்றுவிட்டதை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியினராகச் செயல்படுவர் என்று திரு நல்லகருப்பன் வாக்குறுதி அளித்தார்.
மக்கள் விரும்பாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மக்கள் செயல் கட்சி முற்பட்டால் அதை எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பர்.
பொருள், சேவை வரி உயர்த்தப்பட்டதை அவர் உதாரணம் காட்டினார்.
‘பொஃப்மா’ போன்ற சட்டங்களை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாதிடுவர் என்று திரு நல்லகருப்பன் உறுதி அளித்தார்.
அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே காரணமின்றி நாங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பப்போவதில்லை என்றார் அவர்.
தேசிய நலனைக் காக்கும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்வைத்தால் அதற்குத் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குவர் என்றும் அவர் சொன்னார்.