நாடாளுமன்றத்தில் கூடுதல் எதிர்க்கட்சிகளுடன் பலவீனமான அரசாங்கம் வேண்டுமா அல்லது சிங்கப்பூரை நிர்வகிக்க பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் மக்கள் செயல் கட்சிக்கும் வலுவான அதிகாரத்தைக் கொடுக்கவேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவுசெய்யவேண்டும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.
வாக்காளர்கள் பலருக்கு மக்கள் செயல் கட்சி ஆட்சியமைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத்திற்குக் கூடுதல் எதிர்க்கட்சியினரை மீண்டும் அனுப்பவேண்டும் என்று விரும்புகின்றனர் என ஏப்ரல் 25ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் திரு கோ குறிப்பிட்டார்.
“அது, இன்றைக்கு அதிகம் செலவு செய்துவிட்டு இக்கட்டான காலத்துக்குச் சேர்த்துவைக்கவேண்டும் என்று விரும்புவதைப் போல உள்ளது. உண்மை என்னவென்றால் வாக்காளர்களால் இரண்டையும் பெறமுடியாது,” என்று சிங்கப்பூரின் இரண்டாம் பிரதமராகப் பொறுப்பு வகித்த 83 வயது திரு கோ சொன்னார்.
தமது சொந்த அனுபவத்தைச் சுட்டிய திரு கோ, அரசியல் பலத்தையும் சிங்கப்பூரை வழிநடத்துவதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்க ஒரு சிறிய நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்தில் கூடுதல் எண்ணிக்கையில், தரமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றார்.
“குறிப்பாக புவிசார் அரசியல் சர்ச்சைகள், பதற்றம் போன்ற சவால்களுக்கு இடையே அது மிகவும் முக்கியம்,” என்று திரு கோ வலியுறுத்தினார்.
மக்கள் செயல் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர்களாக மதிப்பிடுவதைப் போல எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளையும் வாக்காளர்கள் மதிப்பிடவேண்டும் என்று திரு கோ குறிப்பிட்டார்.
“யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது இப்போதைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
நமது எதிர்காலத்தை எப்படி வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும் என்ற அவர், வலுவான எதிர்கட்சி ஆனால் வலுவிழந்த அரசாங்கமா அல்லது வலுவான, நல்ல அரசாங்கமும் இறுதிவரை நீடிக்கும் நிலையான அரசியல் கொண்ட நாடாளுமன்றமா என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும் என்றார் திரு கோ.
தொடர்புடைய செய்திகள்
திரு கோ, 44 ஆண்டுகள் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றி 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர்.