இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்கான வாக்களிப்பு வரம்பு ஆராயப்படும்

2 mins read
8ca31363-e0ec-43eb-b9ba-6544b0f39911
பார்க்எட்ஜ்@பிடாடாரி குடியிருப்புப் பகுதியை ஜனவரி 8ஆம் தேதி பார்வையிட்ட அமைச்சர் சீ, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்கான வாக்களிப்பு வரம்பு குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

குறைவான வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள், மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 75 விழுக்காட்டு வாக்கு ஆதரவைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றார் திரு சீ.

பார்க்எட்ஜ்@பிடாடாரி குடியிருப்புப் பகுதியை வியாழக்கிழமை (ஜனவரி 8) பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம் ‘வெர்ஸ்’ குறித்துப் பேசிய அமைச்சர் சீ, அத்திட்டத்திற்கு வாக்களிக்கும் வயது வரம்பு குறித்தும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட பல வீடுகளை ஒரேநேரத்தில் மறுமேம்பாடு செய்ய நம்பிக்கை உள்ளதாகவும் அவர் சொன்னார்.

புது வீடு வாங்குவதற்கான வருமான உச்சவரம்பை உயர்த்துவது, தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை ஒற்றையர் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதைக் குறைப்பது, தனியார் வீட்டை விற்ற பின்னர் மறுவிற்பனை வீடு வாங்க 15 ஆண்டுகள் காத்திருக்கும் நேரம் ஆகியவை குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் திரு சீ தெரிவித்தார்.

அந்த மூன்று மாற்றங்களும் வெவ்வேறு கட்டங்களில் இடம்பெற வேண்டுமென்று கூறிய அவர், கூடுதலான வீடுகள் கட்டப்பட்டால் அந்த மாற்றங்கள் எளிதாக இடம்பெற முடியும் என்றார்.

“தற்போதைய நிலை நீடித்தால் இந்த மாற்றங்கள் எளிமையாகக் கொண்டு வரப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று செய்தியாளர்களிடம் சொன்னார் திரு சீ.

அண்மைக் காலமாக ‘பிரைம்’ பிரிவில் வரும் புதிய வீடுகளில் ஐந்தறை வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை ஒட்டிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரே நிலத்தில் அதிக வீடுகளைக் கட்டுவதும், கட்டுமானப் போட்டித்திறனை அதிகரிப்பதும் ஐந்தறை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்