சிக்கல்களைக் கையாள முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதே சிறந்தது: சான் சுன் சிங்

சிக்கல்களைக் கையாள முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதே சிறந்தது: சான் சுன் சிங்

2 mins read
பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை முன்பே அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே சிங்கப்பூரின் அணுகுமுறை என்றார் தற்காப்பு அமைச்சர்
71736637-51d3-47d2-a138-7a411a52777b
‘தடுப்பதிலிருந்து தயாராய் இருப்பதற்கு உருமாற்றம்: கட்டமைப்புகளின் சுகாதாரப் பாதுகாப்பு’ மாநாட்டைத் தொடங்கி வைத்தார் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை முன்பே அடையாளம் கண்டு உகந்த நடவடிக்கைகளை எடுக்கும் அணுகுமுறைதான் சிங்கப்பூருக்குத் தேவை. பிரச்சினை ஏற்படும்போது அந்த நேரத்தில் நடவடிக்கை எடுப்பது சரியன்று எனத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

தேவைப்படும்போது இருக்கவேண்டிய ஆற்றலின் முக்கியத்துவம் அதற்கு முன்பு அறியப்படமால் இருக்கலாம். அவற்றில் முன்கூட்டியே கவனம் செலுத்துவதுதான் அந்த அணுகுமுறை என்று அவர் விவரித்தார்.

20வது பொதுச் சுகாதார, தொழில்சார் மருத்துவ மாநாட்டைத் (Public Health and Occupational Medicine Conference) தொடங்கி வைத்தபோது அவர் பேசினார். அந்நிகழ்ச்சி தெமாசெக் கிளப் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.

‘தடுப்பதிலிருந்து தயாராய் இருப்பதற்கு உருமாற்றம்: கட்டமைப்புகளில் சுகாதாரப் பாதுகாப்பு’ (from prevention to preparedness: safeguarding health across systems) என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.

அமெரிக்க முன்னாள் தற்காப்பு அமைச்சர் டோனல்ட் ரம்ஸ்ஃபீல்ட் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு சான், “ஒன்றை நடக்காமல் பார்த்துக்கொள்வது, அறியப்பட்ட வழிகளைக் கொண்டு தெரிந்தவற்றைக் கையாள்வது தேவைதான், ஆனால் போதுமானதல்ல. நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் அறியப்படாத விவகாரங்களையும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படாத அறியப்படாத விவகாரங்களையும் கையாள்வது பெரிய அளவில் மேலும் சவாலானவையாகும்,” என்று விவரித்தார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல்

எடுத்துக்காட்டாக, ஒருகட்டத்தில் நடந்தே தீரும் என்று கணிக்கப்பட்டுள்ள நோய்ப் பரவல்களைக் கையாள்வதாகும் என்று அவர் சொன்னார். அதேவேளை, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் போன்றவற்றைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமல் இருக்கும்.

நாடுகளுக்கிடையிலான அரசியல் சூழல், மருந்துத் துறை, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தச் சூழல் உருவாகலாம் என்று திரு சான் சுட்டினார். அதனால் நம்மையும் நமது குழுக்களையும் நமது முறைகளையும் எப்படித் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்தந்த நேரத்தில் உருவாக்கப்படும் முறைகள் தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கு உகந்தவையாக இருக்கும்.

எனினும், பொதுச் சுகாதாரத்துக்கும் தற்காப்புக்கும் இடையே ஒத்துப்போகும் அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு சான், நெருக்கடி நேரும்போது அடிமட்டத்திலிருந்து ஆற்றலை உருவாக்குவதற்கான நேரம் இருக்காது என்பதைச் சுட்டினார்.

அதனால்தான் ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால் அதைக் கையாளக்கூடிய ஆற்றலை முன்பே உருவாக்குவது அவசியம் என்றார் அவர்.

அதை அடிப்படையாகக் கொண்டுதான் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் விவரித்தார்.

அதன்மூலம் தகுந்த பரிசோதனைகள் மூலமாகவும் மருத்துவப் பிரிவுகள் வாயிலாகவும் தேசிய சேவையாளர்களுக்கு உகந்த ராணுவப் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகத் திரு சான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மருத்துவம்சான் சுன் சிங்நடவடிக்கை