புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்

மே தினச் செய்தியை வெளியிட்ட பாட்டாளிக் கட்சி

புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்

2 mins read
f69a01fd-47cf-49c2-b52c-9bdd9859091d
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், ஊழியர்களுக்குக் கூடுதல் உதவிகள் வழங்கும்படி வலியுறுத்தினார். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் புதிய பட்டதாரிகளைப் பயிற்சி வேலைகளில் பணியமர்த்தும்படி நிறுவனங்களை ஊக்குவிக்கவேண்டும். அதற்கு ஊதிய மானியங்களை வழங்கும்படி பாட்டாளிக் கட்சி பரிந்துரைத்துள்ளது.

தொழிலாளர் தினச் செய்தியை வியாழக்கிழமை (மே 30) சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாட்டாளிக் கட்சி, வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவால் தொடக்கநிலை வேலைகள் பறிபோகக்கூடிய அபாயம் இருப்பதைச் சுட்டியது.

செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர் சந்தையை உருமாற்றி வருவதைக் குறிப்பிட்ட அக்கட்சி, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு குறைந்த செலவில் தொடக்கநிலை வேலைகளைச் செய்துவிடலாம் என்று சில முதலாளிகள் எதிர்பார்க்கின்றனர் என்றது.

இளம் பட்டதாரிகள் ஆரம்பக் கட்டத்தில் போதுமான அனுபவத்தைப் பெறாவிட்டால், பொருளியலுக்குத் தேவையான எதிர்கால நிபுணர்களைச் சிங்கப்பூரால் உருவாக்க முடியாமல் போகலாம் என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் குறிப்பிட்டார்.

எனவே, வேலை தொடர்பான நேரடி அனுபவங்களையும் நம்பிக்கையையும் இளம் ஊழியர்கள் பெற கூடுதல் வழிகளை அமைத்துத் தரவேண்டும் என்று திரு சிங் அழைப்புவிடுத்தார்.

பயிற்சி வேலைகளுக்குப் புதிய பட்டதாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்துவதை ஊக்குவிக்க தற்காலிக ஊதிய மானியங்களை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அந்த ஊதிய மானியம், தொழில்நுட்ப மாற்றங்களை நிறுவனங்கள் ஏற்கும் வேளையில் இளையர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கும் இன்றைய காலகட்டத்தில் ஊழியர்களுக்கான ஆதரவை வலுப்படுத்துவதைப் பாட்டாளிக் கட்சியின் மே தினச் செய்தி அதிக கவனம் செலுத்தியது.

நிலையற்ற அனைத்துலகப் பொருளியலில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்களைப் பாதுகாக்க வேலை இழப்பு காப்பீடுத் திட்டத்தையும் அறிமுகம் செய்யும்படி பாட்டாளிக் கட்சி மீண்டும் வலியுறுத்தியது.

அத்தகைய திட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்த திரு சிங், நிதிச் சுமையை எதிர்கொள்ளக்கூடியோருக்கு அது உதவியாக இருக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்