‘2023ல் சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி பதிவானது’

‘2023ல் சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி பதிவானது’

2 mins read
சற்றே கூடுதலான நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்தன: மனிதவள அமைச்சு
b5ee3cb3-ab24-4ea8-ad9e-4d5e325871d4
2022ஆம் ஆண்டைவிட 2023ல் சம்பள உயர்வு மெதுவான வளர்ச்சி கண்டதாக மனிதவள அமைச்சு கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) சம்பளம் அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தாலும் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது மெதுவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்ததாலும் முதலாளிகள் லாபத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சவால்களைச் சந்தித்ததாலும் ஒட்டுமொத்தச் சம்பளம் 2023ல் 5.2 விழுக்காடு அதிகரித்தது. 2022ல் அது 6.5 விழுக்காடாகப் பதிவானது.

பணவீக்கம் தணிந்தபோதும் சம்பள உயர்வு விகிதம் 2022ஆம் ஆண்டைப்போலவே 0.4 விழுக்காடாக இருந்தது என்று ஜூன் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள், குறைந்தது ஓராண்டு ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலை பார்க்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்குப் பொருந்தும். ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் மத்திய சேமநிதிப் பங்களிப்பையும் இது உள்ளடக்கும்.

2023ல் அனைத்துத் துறைகளிலும் சராசரிச் சம்பளம் அதிகரித்தது. தங்குமிடம், சொத்துச் சந்தை, சேவைத் துறைகளில் ஆக அதிக உயர்வு பதிவானது. ஆண்டு அடிப்படையில் இந்தத் துறைகளில் 8 விழுக்காட்டு ஊதிய உயர்வு பதிவானது.

அவற்றுக்கு அடுத்ததாக நிதித் துறையில் 7.6 விழுக்காட்டுச் சம்பள உயர்வு பதிவானது.

உற்பத்தித் துறையில் ஆகக் குறைவான ஊதிய உயர்வு பதிவானது. சென்ற ஆண்டு இத்துறையில் சம்பளம் 4 விழுக்காடு உயர்ந்தது. ஒப்புநோக்க, 2022ல் அது 5.7 விழுக்காடாக இருந்தது.

நிர்வாக, சேவைத் துறையில் மட்டுமே சென்ற ஆண்டு மிக வலுவான சம்பள உயர்வு பதிவானதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

படிப்படியாக உயரும் சம்பள முறைத் திட்டத்தின் எதிரொலி இது என்று அமைச்சு சொன்னது.

உற்பத்தித் திறன், பயிற்சி இலக்குகள் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்ட படிப்படியாக உயரும் சம்பள முறை 2023 மார்ச் மாதத்திலிருந்து நிர்வாக உதவியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

சென்ற ஆண்டின் ஒட்டுமொத்த சம்பள உயர்வு விகிதமான 5.2 விழுக்காடு என்பது, பொருளியல் மந்தமற்ற இதர காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்பதை அமைச்சு சுட்டியது.

சென்ற ஆண்டு லாபம் ஈட்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை 82.1 விழுக்காடு என்று அது சொன்னது.

“இருப்பினும், பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்ததால் 2022ஆம் ஆண்டைவிடச் சென்ற ஆண்டு லாபம் குறைந்ததாகக் கூடுதலான நிறுவனங்கள் தெரிவித்தன,” என்று மனிதவள அமைச்சு கூறியது.

எனவே சென்ற ஆண்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய நிறுவனங்களின் விகிதம் 65.6 விழுக்காடானது. 2022ல் அது 72.2 விழுக்காடாக இருந்தது.

நிறுவனங்கள் வழங்கிய சம்பள உயர்வின் விகிதமும் சென்ற ஆண்டு சற்றே சரிந்து 7.2 விழுக்காடாகப் பதிவானது.

இவ்வேளையில், சென்ற ஆண்டு சம்பளத்தைக் குறைத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக அதிகரித்தது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு 5.2 விழுக்காட்டு நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்தன.

2022ல் 4.5 விழுக்காடாகப் பதிவான சம்பளக் குறைப்பு விகிதம் சென்ற ஆண்டு 6.2 விழுக்காடாக அதிகரித்தது.

உயர்பதவி வகிக்கும் மூத்த அதிகாரிகளிடையே சம்பள உயர்வு மெதுவடையும் விகிதம் அதிகம் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. 2022ல் 6.7 விழுக்காடாக இருந்த அந்த விகிதம், 2023ல் 4.6 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்
ஊதியம்மனிதவள அமைச்சுஅறிக்கை