புதிய, மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனியார் வீட்டிலிருந்து மறுவிற்பனை வீட்டுக்கு மாற விரும்புவோரின் காத்திருப்புக் காலம் 2027ஆம் ஆண்டுக்கு முன்னரே குறையக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
தோ பாயோவில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்வாண்டிலிருந்து மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதைச் சுட்டினார்.
கொவிட்-19 காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட, தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளின் ஐந்தாண்டு குடியிருப்புக் காலம் நிறைவடைவதால் அந்த நிலை ஏற்படலாம் என்றார் அவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2025ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரை 50,000க்கும் அதிகமான வீடுகளை விற்பனைக்கு விடுகிறது.
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள், மறுவிற்பனை வீடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மறுவிற்பனை வீட்டு விலை மிதமடையலாம் என்றும் எதிர்பார்ப்பதாகத் திரு சீ குறிப்பிட்டார்.
எனவே, தனியார் வீட்டு உரிமையாளர்கள் மறுவிற்பனை வீடுகளுக்கு மாற 2027 அல்லது 2028ஆம் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை என்று அவர் சொன்னார். அந்தத் திட்டம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.6 விழுக்காடு உயர்ந்தது. கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்புநோக்க அது 2.6 விழுக்காடு சரிந்தது. கடந்த ஐந்து காலாண்டுகளில் அது ஆக குறைவான வளர்ச்சி விகிதம்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகச் சந்தையில் விலை நிலைபெறுவதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிவதாகவும் திரு சீ சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். நிலைமை தொடர்ந்து மேம்பட்டால் 15 மாத காத்திருப்பு விதிமுறையை நீக்குவது அல்லது குறைப்பது குறித்துத் தீர்மானிப்போம்,” என்று அவர் விளக்கினார்.
காத்திருக்கும் காலத்தைக் குறைப்பதைவிட அதை முழுமையாக அகற்றுவது பற்றிய யோசனை குறித்து திரு சீ கருத்துரைத்தார்.
“நாங்கள் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. ஆனால் அதை முழுமையாக நீக்க சூழல் அனுமதித்தால் அதுபற்றி யோசிக்க வேண்டும்,” என்றார் அவர்.
15 மாத காத்திருப்பு விதிமுறையால், தகுந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டை வாங்குவதில் தனியார் வீட்டு உரிமையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றார் அவர். இருப்பினும், வீட்டு விலையைத் தணிப்பதற்கான நோக்கம் தொடர்ந்து ஏற்புடையதாக இருக்கிறது என்றார் திரு சீ.
“மறுவிற்பனை வீட்டு விலை வேகமாக உயர்ந்து வாங்குவோருக்குக் கட்டுப்படியாகாமல் இருந்துவிடக்கூடாது. குறிப்பாக மறுவிற்பனை சந்தைக்குள் கால்பதிக்க விரும்பும் முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு,” என்று அவர் குறிப்பிட்டார்.

