தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் செயல்படத் தொடங்கிய ‘வேக் அப் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கம்

1 mins read
02be5177-00e9-4dbe-9e26-012216d3b625
கடந்த மாதம் முடக்கப்பட்ட ‘வேக் அப் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. - படம்: வேக் அப் சிங்கப்பூர் / ஃபேஸ்புக்

மெட்டா நிறுவனத்தால் ஒரு வார காலம் முடக்கப்பட்டிருந்த ‘வேக் அப் சிங்கப்பூர்’ (Wake Up Singapore) செய்தித் தளத்தின் ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 181,000 பேர் பின்பற்றும் அந்த ஃபேஸ்புக் பக்கம் முதல்முறையாக கடந்த மாதம் 26ஆம் தேதி முடக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒருசில ஃபேஸ்புக் பக்கங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புதன்கிழமை (அக்டோபர் 8) மெட்டா நிறுவனம் தெரிவித்தது.

அந்தக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பக்கங்கள் மறுபடியும் செயல்படத் தொடங்கிவிட்டதாக மெட்டா பேச்சாளர் கூறினார்.

‘வேக் அப் சிங்கப்பூர்’ தளத்தைத் தொடங்கிய அரிஃபின் ‌‌‌ஷா ஃபேஸ்புக் செயலி மூலம் கணக்கைத் திரும்பச் செயல்படுத்த பலமுறை முறையீடு செய்ததைப் பகிர்ந்துகொண்டார்.

இம்மாதம் 3ஆம் தேதி, ‘வேக் அப் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கம் இணையப் பாதுகாப்பு தொடர்பில் சமூகத் தரநிலைகளுக்கு உட்படவில்லை என்ற பதிலை மெட்டா நிறுவனத்திடமிருந்து பெற்றதாகத் திரு ‌அரிஃபின் சொன்னார்.

எத்தகைய பாதுகாப்பு விதிமீறல்கள் ‘வேக் அப் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கத்தில் காணப்பட்டது என்பதை நிறுவனம் விளக்கவில்லை.

திரு அரிஃபின் மே மாதம் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.

குறிப்புச் சொற்கள்