பொய்யான கதையைப் பதிவு செய்ததாக ‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தளத்தின் நிர்வாகி அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர் (26), மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரிஃபின் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் தமது கர்ப்பப்பையில் இருந்த குழந்தை கலைந்ததாக சு நன்டர் வீ என்னும் 28 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி ‘வேக் அப்’ சிங்கப்பூரிடம் பொய்யான கதையை சொல்லியுள்ளார்.
கதையின் உண்மையை ஆராயமல் அரிஃபின் இந்தத் தகவலை வேக் அப் இணையத்தளம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் பதிவு செய்தார்.
இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை புகார் கொடுத்தது. கதைக்கு எதிராக போஃப்மா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
சு நன்டர் வீயும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்த மாதம் ஒப்புக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.