உடற்பிடிப்பு, கால்பிடிப்பு நிலையமான ‘வான் யாங்’ கடந்த ஆண்டு திடீரென அதன் செயல்பாடுகளை நிறுத்தியது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
முன்கூட்டியே சேவைகளுக்குப் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் செய்வது அறியாது சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சங்கம் நடத்திய விசாரணையில் வாடிக்கையாளர்களுக்கு 1.29 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. வான் யாங் நிறுவனம் தொடர்பாக சங்கத்திடம் 1,065 புகார்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தரும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் நம்பகத்தன்மை கொண்ட நான்கு உடற்பிடிப்பு, கால்பிடிப்பு நிலையங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நான்கு நிலையங்களும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உடற்பிடிப்பு, கால்பிடிப்பு சேவைகளை இலவசமாக வழங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
சங்கத்திடம் புகார் அளித்த வாடிக்கையாளர்கள் ஜனவரி 26ஆம் தேதி முதல் JHL TCM Beauty, Joyre TCMedi Spa, SYOUJIN, Zen Beauty ஆகிய நிலையங்களில் சேவைகளைப் பெறலாம்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இலவசமாக மூன்று அமர்வுகள் வரை சேவை வழங்கப்படும். அதன் மொத்த மதிப்பு 150 வெள்ளியாகும்.
அதேபோல் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சேவைகளுக்கான முன்பதிவுகளைச் செய்ய வேண்டும். இலவச சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இலவச சேவையை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் ‘வான் யாங்’ நிலையத்திடம் முன்கூட்டியே சேவைகளுக்குப் பணம் செலுத்திய ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும்
இலவச சேவை வழங்கும் நான்கு நிறுவனங்களின் 23 நிலையங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன. வான் யாங்’ நிலையத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பலருக்கு இந்த நான்கு நிறுவனங்களும் தற்போது வேலை கொடுத்துள்ளன.
‘வான் யாங்’ நிறுவனம் அதன் ஐந்து நிலையங்களையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடியது.

