ஆள்மாறாட்டம் செய்யும் ‘ஐமெசேஜ்’ மோசடி குறித்து எச்சரிக்கை

ஆள்மாறாட்டம் செய்யும் ‘ஐமெசேஜ்’ மோசடி குறித்து எச்சரிக்கை

1 mins read
96db4513-bca5-471c-a9a6-f6531a817157
வெளிநாட்டு எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து காவல்துறை அல்லது மாவட்ட நீதிமன்றங்கள் அனுப்பியதுபோன்ற ‘ஐமெசேஜ்’ தகவல்களைச் சிலர் பெற்றுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஐஃபோன் பயன்படுத்துபவர்களின் ‘ஐமெசேஜ்’ தளம் வாயிலான மோசடி குறித்து தற்போது காவல்துறை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது.

ஐமெசேஜ் வழியாகத் தனிப்பட்ட விவரங்களையும் வங்கிக் கணக்குத் தகவல்களையும் பெறும் வகையில் மோசடி முயற்சிகள் நடைபெறுவது குறித்து அந்தத் தகவல் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ஐமெசேஜ் மோசடிச் சூழ்ச்சிகளால் எந்தவொரு நிதி இழப்பும் இதுவரை பதிவாகவில்லை என்றாலும் பல வழிகளில் இந்த மோசடிக்கு முயல்வது கவனிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான மோசடியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், வெளிநாட்டு எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து காவல்துறை அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டது போல வந்த ஐமெசேஜ் தகவல்களைப் பெற்றுள்ளனர்.

அந்தத் தகவலைப் பெற்றவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் கார்நிறுத்தக் கட்டணப் பாக்கி வைத்துள்ளார் என்றும் நீதிமன்ற அழைப்பாணைக்குக் கட்டுப்படத் தவறிவிட்டார் என்றும் ஐமெசேஜில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.

கைதாணை அல்லது வாகனப் பறிமுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தப்போவதாகப் பயமுறுத்தியதோடு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த ஓர் இணைப்பை ‘கிளிக்’ செய்யுமாறு அல்லது ஒரு குறியீட்டைப் பதிலாக அளிக்குமாறு அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மோசடிகாவல்துறைஎச்சரிக்கை