குழந்தைகளுக்குப் போத்தல் மூலம் தாமாகவே பால் புகட்டும் வசதியைக் கொண்ட தலையணை வகைகளை சிங்கப்பூர் வாசிகள் வாங்கியிருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அதுகுறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
இத்தகைய ‘சுய-பாலூட்டும்’ (self-feeding) தலையணைகளால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், விக்கலால் ஏற்படும் பாதிப்புகளை உண்டாக்கும் என்று அபாயங்கள் உள்ளன என்று ஆணையம் குறிப்பிட்டது.
அதனால், பெற்றோரும் பிள்ளை பராமரிப்பாளர்களும் அந்த வகைத் தலையணைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தலையணைகள் குறித்த படங்களும் அறிக்கையில் இருந்தது. படத்தில் குழந்தையின் கழுத்தைச் சுற்றி வளைத்திருக்கும் தலையணை இருந்தது. அதேபோல் பிள்ளையின் மார்புபகுதியின் மேல்புறத்தில் போத்தல் உள்ளது.
“குழந்தைகளுக்குப் போத்தல் வழியாக வரும் பாலின் வேகத்தைக் கட்டுப்படுத்தவோ, எப்போது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறியவோ, அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதற்கேற்ப செயல்படும் உடல் லாவகமோ, அறிவாற்றலோ கிடையாது. ஏதேனும் தவறாக நடக்கும்போது மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் திறனும் அவர்களுக்கு இல்லை. அதனால் பிள்ளையின் உயிருக்கு ஆபத்தாகலாம்,” என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், குழந்தைகள் அசையும்போது தலையணையும் நகரக்கூடும் அதுவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
இணைய வர்த்தகத் தளமான லஸாடாவில் அந்தத் தலையணைகளைப் பார்க்க முடிந்தது. ஷாப்பி தளத்தில் அவை விற்பனையில் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆணையம் தகவல் அனுப்பியுள்ளது.

