சிங்கப்பூர்க் காவல்துறையின் சின்னம் கொண்ட எச்சரிக்கைத் தகவலைத் தனிப்பட்ட மின்சாதனங்களில் காண நேரிட்டால் கவனத்துடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டவிரோத உள்ளடக்கங்களை இணையத்தளங்களில் பார்வையிட்டதற்காகத் தனிப்பட்ட மின்சாதனங்கள் முடக்கப்பட்டுள்ளதாக வரும் அத்தகைய தகவல்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர்க் காவல்துறையின் சின்னத்துடன் வரும் தகவல், குறிப்பிட்ட நேரத்துக்குள் எஞ்சிய அபராதங்களைச் செலுத்தினால்தான் பாதிக்கப்பட்டோரின் மின்சாதனங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தது.
அபராதம் செலுத்தாதோரின் சாதனங்கள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் அத்தகையோர்மீது குற்றஞ்சாட்டப்படும் என்றும் அந்தத் தகவல் மேலும் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்டோரிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நேரம் குறைவதைப் போல காட்டும் நேரக் கணிப்புக் கடிகாரமும் திரையில் காண்பிக்கப்படும். அத்துடன், வங்கி விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்படியும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்படாத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனையைத் தொடர்ந்து மோசடிக்கு ஆளானதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்துகொண்டனர்.
அத்துடன், கூறப்பட்ட அபராதத்தைவிட கூடுதல் தொகையும் கழிக்கப்பட்டது.
கணினிகள், மடிகணினிகள் போன்ற தனிப்பட்ட மின்சாதனங்களை வேறோர் இடத்திலிருந்தவாறு முடக்கி பணம் செலுத்தும்படி காவ்லதுறை கூறாது என்று அதிகாரிகள் நினைவூட்டினர்.
