மின்சிகரெட்டுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளம்பரம் செய்யப்பட்டு இணையம் வழி ‘உயிர்ச்சத்து நீர்ச்சிதற்றிகள்’ என்று அழைக்கப்படும் சாதனங்கள் விற்கப்படுவதாகவும் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவற்றில் எத்தகைய ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நிபுணர்கள், அவை உடல்நலத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தனர்.
ஆரோக்கியமான மின்சிகரெட்டுகள் என்று சந்தைப்படுத்தப்பட்டு இத்தகைய ‘உயிர்ச்சத்து நீர்ச்சிதற்றிகள்’ விற்கப்படும் போக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரபலமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை விளம்பரப்படுத்த சில சமூக ஊடகப் பிரபலங்களும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது.
மின்சிகரெட்டுகளைச் சிங்கப்பூர் தடை செய்துள்ளது.
அதன்படி, புகைக்கும் நோக்குடன் எவ்வித திரவத்தையும் ஆவியாக்கும் கருவி தடை செய்யப்பட்டுள்ளது.
‘உயிர்ச்சத்து நீர்ச்சிதற்றி’ சாதனத்தை வைத்திருந்தது தொடர்பாகச் சிங்கப்பூரில் குறைந்தது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

