வாஷிங்டன்: அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், அதன் 800 ஊழியர்களில் ஏறத்தாழ 300 பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி வில் லூயிஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அந்த நாளிதழ் சனிக்கிழமை (பிப்ரவரி 7) அறிவித்துள்ளது. ஊழியர்களின் பணிநீக்க முடிவை நிறுவனத்தின் உரிமையாளரான பெருஞ்செல்வந்தர் ஜெஃப் பெசொஸ் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது. அவர் அமேசான் நிறுவனத்தின் தோற்றுநர் என்பது கவனத்துக்குரியது.
திரு வில் லூயிஸுக்குப் பதிலாக நாளிதழின் நிதி அதிகாரியாக 2025ஆம் ஆண்டில் இணைந்த திரு ஜெஃப் டிஒநோஃபிரியோ பதிவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. திரு வில் லூயிஸ் கடந்த 2024ஆம் ஆண்டு நாளிதழில் தலைமைப் பதவியில் இணைந்தாலும் ஈராண்டுகளாக அவரால் நிதி நிலையைச் சீராக்க முடியவில்லை.
பல வாசகர்கள் இந்த முடிவினால் கோபம் அடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 5) ஊழியர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களும் அலுவலகத்தின் வெளியே போராட்டங்களில் இறங்கினர்.
உலகளவில் பல பத்திரிகைகள் நஷ்டத்தை எதிர்நோக்கி, தொடர்ந்து இயங்கிடப் போராடிவரும் வேளையில் அமெரிக்காவிலும் அதே பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அண்மைய காலமாகவே திரு லூயிஸ் நிர்வாகத்தை பல சந்தாதாரர்கள் சாடி வந்துள்ள நிலையில் அவரது பணி நீக்கம் நடந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் நாளிழின் பல வெளிநாட்டு செய்தியாளர்களும் வேலைகளை இழந்துள்ளனர். அதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியானது.
அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ், தி வால்ஸ்திரீட் ஜர்னல் போன்ற நாளிதழ்கள் லாபத்தை தக்கவைத்துக்கொண்டு செயலாற்றும்போது, 1877முதல் இயங்கிவரும் வாஷிங்டன் போஸ்ட் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

