கழிவுகளைக் குறைப்போம்: நீடித்த சிங்கப்பூருக்கான இளமை ததும்பும் பணி

10 mins read
fda1a399-4fab-43cb-8f7b-66db5106fee2
‘மோனோ.எஸ்ஜி’ தொண்டூழியரான 19 வயது மாணவி சு.லோஹித்தா, காலாவதியாகவுள்ள பொருள்களை ஒரு பெட்டியில் வைத்துள்ளார். - படம்: ரவி சிங்காரம்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி லோஹிதா,19 வாரத்தில் இரு நாள்கள் வரை உணவு விரயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதனை அதிகப்படியான உணவுகளை சமூகத்திற்கு மறுவிநியோகம் செய்து வரும் சமூக நிறுவனத்தின்மூலம் செய்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியின் இளையர் பயணத் திட்டத்தின் பகுதியாக தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரிலுள்ள கிராமப் பள்ளிக்கு இரு வாரகாலம் சென்று வந்தார் லோஹிதா. அங்கு கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து உணவு விரயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பங்களிப்பதில் ஆர்வம் கொண்டார்.

“அங்கு உணவு விரயத்தைத் தடுக்கும் நோக்கில் வயதுக்கு ஏற்ற அளவு உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் உணவை முழுவதும் உண்ண வேண்டிய கட்டாயம் இருந்தது. தாய்லாந்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இது நடைமுறையில் இருப்பதாக அறிந்தேன். அது, சிங்கப்பூரில் எவ்வாறு உணவு விரயத்தைத் தடுக்கலாமென என்னைச் சிந்திக்க வைத்தது.”

அதுவே, ஊர் திரும்பியவுடன் மோனோ.எஸ்ஜி அமைப்பில் தன்னார்வலராக இணையக் காரணமாக அமைந்தது. உணவு விரயத்தைக் குறைக்கத் தமது சொந்த வாழ்விலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் இவர். “தேவையானதை மட்டுமே வாங்கி, சமைக்கும் வகையில் உணவுத் திட்டங்களை உருவாக்கத் தொடங்கினேன். உணவு விரைவில் பாழாகாமல் இருக்க அவற்றைச் சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கிறேன். அங்காடிகளுக்குச் செல்லும்போது விரைவில் காலாவதியாகவுள்ள பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் அவற்றை வாங்குவேன். அவை பெரும்பாலும் நல்ல தரத்தில் இருப்பதால் அவற்றை வாங்குகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுடன் வெளியில் செல்லும் முன்னர், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள், கோப்பைகளைக் கையில் கொண்டுவர வலியுறுத்துகிறேன். அதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கமுடியும்.”

லோஹிதாவின் அர்ப்பணிப்பு, உணவுக்கு எதிரான போரில் சொந்த முயற்சியால் ஏற்படும் விளைவுகளை அடிகோடிட்டுக் காட்டுகிறது. சிங்கப்பூரில் உணவு விரயத்தைக் குறைக்கவும், நீடித்த நிலைத்தன்மை தொடர்பான நிலையை உணர்ந்து, அதனைச் சரி செய்யவும் பங்களிக்கும் பலர் நம் நாட்டுக்குத் தேவை.

பெரும் நன்மை கருதி கழிவுகளைக் குறைத்தல்

சிங்கப்பூரில் உணவு மற்றும் வீசி எறியக்கூடிய குப்பைகள்:

சிங்கப்பூரில் 646,000 டன் உணவுப் பொருள்கள் வீணாகின. இது ஒவ்வொருவரும் அன்றாடம் இரு கிண்ண அளவு உணவை வீசி எறிவதற்குச் சமமாகும்.

ஆண்டுதோறும், சிங்கப்பூரில் உள்ள வீடுகள், வர்த்தக வளாகங்களில் ஏறத்தாழ 265,000 டன் அளவிலான கலன்கள், நெகிழிப்பைகள், கரண்டிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பொருள்களைத் தூக்கி எறியப்பட்டன. இது 500 ஒலிம்பிக் அளவு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவாகும்.

சிங்கப்பூரின் மொத்தக் கழிவுகளில் 12 விழுக்காடு உணவுக் கழிவுகளாக இருகின்றன. கழிவுகளற்ற சூழலை நோக்கிய பயணத்தின் தேசிய உத்தியில் பகுதியாக உணவு வீணாவதைத் தடுப்பதன் அவசியத்தையும் அவசரத்தையும் இது உணத்துகிறது.

முழு விவரம்:

உணவு, தூக்கி எறியக்கூடிய கழிவுகளைக் குறைப்பது தனிப்பட்ட செயல்கள் மட்டுமன்று - ஒரு பெரிய இலக்கின் சிறு பகுதியாகும். செமாகாவ் குப்பை நிரப்பும் நிலத்துக்குச் செல்லும் குப்பைகளைக் குறைப்பதன்மூலம் நமது ஒரே நிரப்பு நிலத்தின் வாழ்நாளை 2035ஐ தாண்டி நீட்டிக்கலாம்.

செமாகாவ் குப்பை நிரப்பும் நிலத்துக்குச் செல்லும் குப்பைகளைக் குறைப்பதன்மூலம் நமது ஒரே நிரப்பு நிலத்தின் வாழ்நாளை 2035ஐ தாண்டி நீட்டிக்கலாம்.
செமாகாவ் குப்பை நிரப்பும் நிலத்துக்குச் செல்லும் குப்பைகளைக் குறைப்பதன்மூலம் நமது ஒரே நிரப்பு நிலத்தின் வாழ்நாளை 2035ஐ தாண்டி நீட்டிக்கலாம். - படம்: சாவ்பாவ்

‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ இயக்கம், சிங்கப்பூர் பசுமைத் திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்கிறது. இது உணவு வீணாவதைக் குறைக்கவும், ஒருமுறை பயன்படுத்தும் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் ஏதுவான எளிய பழக்கங்களை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கும் தேசிய அளவிலான பிரசாரம்.

கடைகளுக்குப் பைகளையும் போத்தல்களையும் எடுத்துச் செல்வது, போதுமான அளவு உணவை மட்டும் வாங்குவது ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது.

அதன் ஓரு பகுதியாக, இவ்வாண்டு, குடும்பங்கள், வணிகங்கள் பங்கேற்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுப்புகளும் இடம்பெறுகின்றன.

வேஸ்ட் லெஸ்? சே யெஸ்! எனும் நான்கு பாகங்கள் கொண்ட போட்டி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 987FM வானொலிப் படைப்பாளர்கள் ஏவரி அலோய்சியஸ், சென் நிங் வழிநடத்தும் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற உள்ளூர் பிரபலங்கள் ஐரீன் ஆங், சுஹைமி யூசோஃப், ஃபேபியன் கில்பெர்ட், டெபொரா கில்பெர்ட், பையோகெர்ல் எம்ஜே, யூசோஃப் ரஷித், க்ளென் யோங், ஜெர்மேன் டான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது அன்றாட சூழ்நிலைகளில் மட்டுமன்றி, மளிகைப் பொருள்களை வாங்க வெளியே செல்லும்போது, வீட்டில் உணவு சமைக்கும்போது, விடுமுறை நாள்களில் வெளியே செல்லும்போது உணவு, பொருள்கள் வீணாவதைக் குறைப்பது மிகவும் சிரமமானது இல்லை என்பதைக் காட்டுகிறது. 13 செப்டம்பர் 2025 முதல் வாரந்தோறும் பாகங்கள் வெளியீடு காணும். எளிதாகச் செயல்படுத்தக்கூடிய, வீண் செலவுகள் இல்லாத குறிப்புகளை நகைச்சுவை கலந்து சொல்லும் நிகழ்ச்சியின் முதல் பாகத்தை இங்கு காணலாம்.

மளிகைப் பொருள்கள் வாங்குவது முதல் வெளியே உணவுண்பது வரை அன்றாட வாழ்க்கையில் எளிதாகச் செயல்படுத்தக்கூடிய, தாக்கம் மிகுந்த உத்திகளைக் கற்கும் நோக்கில் அமைந்த ‘வேஸ்ட் லெஸ்’ அங்காடிகள் தற்போது பிரபலமடைந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கான பங்களிப்பைச் செய்ய விரும்பினாலும் அதனை எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லையா? செப்டம்பர் 13 (சனி), 14ஆம் (ஞாயிறு) தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை 313@சாமர்செட்டில் ‘வேஸ்ட் லெஸ்’ அங்காடிகளுக்குச் செல்லுங்கள். அங்குள்ள கண்காட்சிகளைக் காண்டு விரயத்தைக் குறைப்பதற்கான எளிய வழிகளைக் கற்றுக்கொள்ளலாம். இலவச பயிலரங்கில் பங்கேற்று கைவினை நினைவுப் பொருளைத் தயாரித்துக்கொள்ளலாம். சொந்த போத்தல் அல்லது கோப்பைகளைக் கொண்டு வந்து, இலவசமாக ‘ஸ்டார்பக்ஸ்’ ஐஸ் காப்பி அல்லது தேநீரையும் வாங்கிக்கொள்ளலாம். *இருப்பு இருக்கும் வரை.

தொடக்க நிகழ்ச்சிக்கு வர முடியவில்லையா? செப்டம்பர் 20 (சனி), 21ஆம் (ஞாயிறு) தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை, ஐஎம்எம் (IMM) கடைத்தொகுதியின் 2ஆம் தளத்திற்குச் செல்லுங்கள். மேலும் தகவல்களுக்கு go.gov.sg/wlsm இணையப்பக்கத்தை நாடலாம்.

கூட்டு முயற்சியின் வலிமை:

‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ இயக்கத்தின் தொடக்க ஆண்டான 2025 இல் அனைத்துலக நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், ஆர்வலர் குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள், பள்ளிகள் அடித்தள அமைப்புகள் உட்பட 260க்கும் மேற்பட்ட பங்காளிகள் இத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக உறுதியேற்றனர். இதில், உணவு வீணாவதைக் குறைப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளையும், முறையான மாற்றத்தையும் கொணர்வதில் முக்கிய பங்களிக்கும் ‘ட்ரீட்ஷூர்’, ‘மோனோ.எஸ்ஜி உள்ளிட்ட அமைப்புகளும் அடங்கும்.

உணவுக் கழிவுகளின் அடிப்படையைக் கையாளுதல்:

ஹோட்டல்களிலுள்ள உபரி ‘புஃபே’ உணவுகள் விரையமாவதைக் குறைக்க அவற்றை கழிவு விலையில் விற்க ‘ட்ரீட்ஷூர்’ நிறுவனத்தின் இணை நிறுவநர் ப்ரிஸ்டன் வோங், 35, காட்டுகிறார். 
ஹோட்டல்களிலுள்ள உபரி ‘புஃபே’ உணவுகள் விரையமாவதைக் குறைக்க அவற்றை கழிவு விலையில் விற்க ‘ட்ரீட்ஷூர்’ நிறுவனத்தின் இணை நிறுவநர் ப்ரிஸ்டன் வோங், 35, காட்டுகிறார்.  - படம்: எஸ்பிஎச் மீடியா

கடந்த 2017 முதல், ‘ட்ரீட்ஷூர்’ நிறுவனம் 30 உணவங்காடி நிறுவனம் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி 50 டன்னுக்கும் அதிகமான உணவு விரயத்தைத் தடுத்துள்ளது. மேலும் அனைத்துலக நிலைத்தன்மை குறித்த நிகழ்ச்சிகள், பயிலரங்குகளுக்காக ஏறத்தாழ 70 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ட்ரீட்ஷூர்’ நிறுவனத்தின் இணை நிறுவநர் ப்ரிஸ்டன் வோங், 35 அவரது குடும்பத்தினர் வீணான உணவுப்பொருள்களைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அப்புறப்படுத்துவதைப் பார்த்தபின் இந்நிறுவனத்துக்கான விதை விழுந்தது.

“உரிய நேரத்தின் உண்ணாமல் போனது குறித்து கவலை கொண்டேன். அளவுக்கு அதிகமாக இருக்கும் உணவுப் பொருள்களைப் பிறருக்குக் கொடுக்கவும், தேவையான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏன் ஒரு தளம் அமைத்துத்தரக் கூடாது?”

“இப்பிரச்சினை வீடுகளில் அதிகம் இருந்தாலும், விற்பனையாகாத உணவு, வாடிக்கையாளர்கள் வீணாக்கும் உணவு என உணவகங்களும், கடைகளும் உணவுப் பொருள்கள் வீணாக முக்கியக் காரணம் என்பதை உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்தே உணவு அங்காடிகள், கடைகளில் உணவு விரயத்தைக் குறைக்கும் சிந்தனை எழுந்தது.”

அவரும் அவருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற கென்னத் ஹாமும்,34 இந்நிறுவனத்தைத் தொடங்கினர்.

‘ட்ரீட்ஷூர்’ மூன்று அம்ச வழிமுறைகள்மூலம் உணவு விரயத்தைக் குறைக்கிறது.

முதலில், ‘ட்ரீட்ஷூர்’ நிறுவனத்தின் ‘புஃபே-இன்-எ-பாக்ஸ்’ தொடர்புகள் மூலம், உணவகங்கள் மூடப்படுவதற்குச் சற்று நேரம் முன்பு அங்கிருந்து உபரி உணவுப்பொருள்களை மக்கள் வாங்கவோ எடுத்துச்செல்லவோ வழிவகுக்கிறது.

‘ட்ரீட்ஷூர்’அதன் பங்காளி உணவுகங்களிலிருந்து உணவு வாங்கக் கலன்கள் கொடுப்பதுடன், அவற்றைத் தொடர்ந்து எடுத்துச் சென்று உணவு வாங்கும்போது அதற்கு 50 காசுகள் தள்ளுபடியும் வழங்குகிறது. பங்காளி உணவகங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பைகளை உபயோகிப்பதை நிறுவனம் தடை செய்கிறது.

இரண்டாவதாக, ‘ட்ரீட்ஷூர்’, தேவைக்கு அதிகமான மளிகைப் பொருள்கள், காலவதி தேதி நெருங்கும் பொருள்கள், ஒழுங்கற்ற ‘பேக்கேஜிங்’காரணமாக வீணாகும் பொருள்களைத் தள்ளுபடி விலையில் வழங்க பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இவை குறைந்த விலையில் ‘ட்ரீட்ஷூர்’ செயலியின்வழி விற்பனை செய்யப்படுகின்றன.

‘ட்ரீட்ஷூர்’ தனிநபருடன் மட்டுமன்றி, அனைத்துலக நிறுவனங்கள், பள்ளிகளுடன் இணைந்து அவர்களின் நிகழ்ச்சிகளுக்குத் தேவைப்படும் உணவுப் பொருள்கள், பழங்களை விநியோகிக்கிறது. நிறுவனம், உணவு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வீணாகாமல் காப்பாற்றப்பட்ட பொருள்களை உணவாக மாற்றி, உணவு தேவைப்படுவோருக்கு வழங்கவும் பணியாற்றுகிறது.

மூன்றாவதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிகள், நிறுவனங்களுக்கு ‘ட்ரீட்ஷூர்’ நடத்திய உணவு நிலைத்தன்மை சுற்றுலாக்கள், பயிலரங்குகள், அமர்வுகள் போன்றவை 3,000 க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்தது. அவற்றுக்கான உணவுகள் உபரிப் பொருள்களிலிருந்து பெறப்பட்டன. இவை, உபரி உணவுப் பொருள்கள் விரயத்தைக் குறைக்கவும், அவற்றை மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கவும் உதவுகிறது.

இவ்வகை நடவடிக்கைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்கள் எவையும் உணவு உண்ணும் கரண்டிகள் உள்ளிட்ட பொருள்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பைகளைக் குறைக்க எளிய வழிகளைக் காண்பிக்கும் நோக்கில் குப்பை வகைகளைப் பிரித்து தனித்தனி குப்பைத் தொட்டிகளில் வீச தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

“வணிகங்கள், பயனீட்டாளர்கள் என அனைவரும் இயன்ற அளவு உணவு விரயத்தைக் குறைக்க, தங்கள் சொந்தக் கொள்முதல், பயனீட்டு உத்திகளைக் கண்காணிக்க வேண்டும்” என்றார் ப்ரிஸ்டன்.

உணவுக்குப் புத்துயிரளித்தல்:

தேக்கா பிளேசில் அமைந்துள்ள ‘மோனோ.எஸ்ஜி’ சமூக அமைப்பாகும். இது காலாவதி தேதி நெருங்கும் நிலையில் உள்ள நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய வகைப் பொருள்களான கலனடை உணவுகள், ‘நூடுல்ஸ்’, சாக்லேட்டுகள், குக்கீக்கள், திண்பண்டங்கள் ஆகிய பொருள்களை மீட்கிறது.

‘மோனோ’ இணை நிறுவனர் லொரெய்ன், உணவுப் பொட்டலங்களில் காலாவதியாகும் தேதியைப் படிப்பது எப்படி என்பதைக் காட்டுகிறார்.
‘மோனோ’ இணை நிறுவனர் லொரெய்ன், உணவுப் பொட்டலங்களில் காலாவதியாகும் தேதியைப் படிப்பது எப்படி என்பதைக் காட்டுகிறார். - படம்: ரவி சிங்காரம்

இவை, உணவு விரயத்தைக் குறைக்கும் எண்ணம் கொண்ட மக்களிடம் விநியோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாராந்திர நன்கொடை இயக்கத்தை நடத்துவதுடன், குறைந்த வருமான சமூகங்களுக்குக் கட்டுப்படியான உணவுகளை வழங்கி ஆதரவளிக்கிறது.

ஜனவரி 2022 முதல் ‘மோனோ.எஸ்ஜி’ அமைப்பு 186 டன் உபரி உணவை மீட்டுள்ளது. குறைந்தது 74 டன் அளவிலான உபரி உணவைத் தேவையுள்ளோர்க்கு வழங்கியுள்ளது. ஏறத்தாழ 80,000 பேருக்கு உணவு வீணாவதைக் குறைக்கும் உத்திகளையும் கற்பித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், பயனீட்டாளர்கள் பழக்கம் முற்றிலும் மின் வணிகமயமாக்கப்பட்டதால், சில்லறை வர்த்தகங்களுக்கு விற்பனை குறைந்தது. இதனால் அவர்கள் உபரி உணவுப் பொருள்கள் தங்கும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால் சில விநியோக நிறுவனங்கள் அவற்றைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, இந்நிறுவனத்துக்கு அளிக்க முன்வந்தன.

‘மோனோ.எஸ்ஜி’ அமைப்பின் இணை நிறுவநர் லோரெய்ன் கோ “காலாவதித் தேதி நெருங்குதல், விநியோகப் பிழைகள், அதிக அளவு ஆகிய காரணங்களால் உணவுப் பொருள்கள், உரிய இடங்களைப் போய்ச் சேர்வதற்கு முன்பே வீணாவதை அறிந்தோம். அதனைத் தடுக்க விரும்பினோம்,” என்றார்.

சமூகத்தில் நிலைத்தன்மை இயக்கத்தை விரிவுபடுத்த அந்நிறுவனம், MoNo.SG, worthy.mono.sg எனும் இணையத்தளத்தையும் தொடங்கியுள்ளது. இது மதிப்புமிக்க பொருள்களைப் பிறருக்கு வழங்க மக்களை ஊக்குவிக்கிறது.

சிறு மாற்றம் பெரும் தாக்கம்:

சிங்கப்பூரில் உணவு வீணாவதைக் குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியும் வணிகங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு தனிநபரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், கழிவுகளைக் குறைப்பதிலும் பங்களிக்கமுடியும். ஊர்வி பிரதான், 17 அதற்குச் சிறந்த சான்றாவார்.

சென்ற ஆண்டு முதல் மோனோ.எஸ்ஜி நிறுவனத்தில் தொண்டூழியம் மேற்கொள்ளும் அவர், அங்கு கற்ற பாடங்களைத் தமது தனிப்பட்ட வாழ்விலும் பயன்படுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலி@கிளைவ் ஸ்த்ரீட்டில் ‘மோனோ.எஸ்ஜி’ ஆதரவளித்த நிகழ்ச்சியில் அதன் தொண்டூழியரான ஊர்வி பிரதான், 17 (வலம்) உபரி பானங்களை மக்களுக்கு  இலவசமாக வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலி@கிளைவ் ஸ்த்ரீட்டில் ‘மோனோ.எஸ்ஜி’ ஆதரவளித்த நிகழ்ச்சியில் அதன் தொண்டூழியரான ஊர்வி பிரதான், 17 (வலம்) உபரி பானங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினார். - படம்: ரவி சிங்காரம்

உணவு விரயத்தைத் தடுக்க, ஊர்வி தனது குடும்பத்தினர் வாங்கும் உணவுகளின் காலாவதி தேதிகளைக் கண்காணித்து, அவற்றைச் சரியான நேரத்தில் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதிக மளிகைப் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பதுடன் உணவு நேரங்களில், தன்னால் முடிக்கக்கூடிய அளவு மட்டுமே வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தனது குடும்பத்தினரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் ஊக்கப்படுத்தியுள்ளார் ஊர்வி. “நாங்கள் வழக்கமாக வீட்டில் உணவுப் பொருள்களை சேமித்து வைக்க பலமுறை பயன்படுத்தக்கூடிய கலன்களைப் உபயோகிக்கிறோம். உணவு வாங்கும்போது சொந்தக் கலன்களைக் கொண்டு செல்லவும் முயல்கிறோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் வேகமான வாழ்க்கை முறையால் பலருக்கு நேரம் இல்லை என்றும் வசதி கருதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தெரிவுசெய்கிறார்கள் என்று எண்ணுகிறார் ஊர்வி.

“பலர் வெளியே உணவுண்ணும்போது, பைகள், கலன்களைக் கொண்டுவரவேண்டும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளாமல் இருக்கலாம்.”

“எளிதில் பார்க்ககூடிய இடத்தில் (எ.கா. கதவின் அருகே) மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை வைத்டிருப்பதை வழக்கமாக்குவதிலிருந்து தொடங்கலாம்,” என்றார் ஊர்வி. மாணவர்கள் வெளியே உணவு உண்ணும்போது வீட்டிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய கலன்களை கொண்டு வருவதன் அவசியத்தைக் கற்பிக்கலாம். இது சிறு வயதிலிருந்தே நற்பழக்கங்களை வளர்க்க உதவும,” என்றார்.

உணவு விரயத்தைக் குறைக்க லோஹிதாவும் சில யோசனைகளை முன்மொழிந்தார். “உணவை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி அவற்றின் ஆயுளை நீட்டிக்க முடியும். எடுத்துக்காட்டாக, அதிகமாகப் பழுத்த வாழைப்பழங்களை அடுதலில் பயன்படுத்தலாம். உணவகங்கள், குறிப்பாக ‘புஃபேக்கள்’, உணவு விரயமாகும் இடங்களுள் முக்கியமானவை. விருந்தினர் பட்டியலை முன்கூட்டியே சரிசெய்து அளவுக்கதிக உணவை வாங்குவதைத் தடுக்க 10 முதல் 15 விழுக்காடு குறைவாகவே உணவை வாங்குவது சிறப்பு. அதிகப்படியான உணவுப் பொருள்களை எளிதாக மறுவிநியோகம் செய்ய ஏதுவாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகை கலன்களையும் தயார் செய்து வைக்கலாம் அல்லது வருகையாளர்களை தங்கள் கலன்களைக் கொண்டுவர ஊக்குவிக்கலாம்,” என்றார்.

தேவையானவற்றை மட்டும் வாங்குவது, கடைக்குச் செல்லும் முன் வீட்டில் இருக்கும் பொருள்களைப் பார்த்துவிட்டுச் செல்வது, அதிகம் வாங்குவதைத் தடுக்க மளிகைப் பொருள் பட்டியல் தயார் செய்வது, தேவையான அளவு மட்டும் உணவு வாங்குவது ஆகியவற்றை ஒவ்வொரு தனிநபரும் பின்பற்றலாம். ஒவ்வொரு வீட்டிலும் உணவு வீணாவதைத் தடுப்பது, கழிவுகளைக் குறைத்து, வளங்களைப் பாதுகாத்து சுற்றுப்புறத்தைக் காப்பதில் பெரும்பங்காக அமையும்.

கழிவுகளைக் குறைக்க எளிய வழிகள்:

கழிவுப் பொருள்களைக் குறைப்பது மக்கள் நினைப்பதை விட எளிதானது. செயல்படுத்தக்கூடிய, சிறு மாற்றத்தைத் தொடங்குவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறு மாற்றங்கள்:

ஒருமுறை பயன்படுத்துபவற்றை குறைத்தல்

  1. மறுபயன்பாடு செய்யக்கூடிய பைகளை வாசற்படியிலும், கைப்பைகளிலும் வைப்பது  
  2. மறுபயன்பாடு செய்யக்கூடிய பைகள், கலன்கள், போத்தல்களை எடுத்து வருவது
  3. இயன்றவரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர்ப்பது

உணவு வீணாவதைக் குறைப்பது

  1. உணவுப் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, அதற்குத் தேவையான பொருள்களை வீட்டில் சரிபார்த்தபின் வாங்குவது உபரிப் பொருள்கள் தங்குவதைத் தடுக்கும்.
  2. மீதமுள்ள உணவைச் சரியான முறையில் சேமித்து வைப்பது
  3. பொதுவாக உண்ணாத உணவுப் பொருள்கள் வாங்குவதைத் தடுக்கலாம்.

முடிவுரை:

கழிவுகளை, குறிப்பாக உணவு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர்ப்பது, பொறுப்பான தேர்வுகளையும் வளர்த்து, நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு பொருள் வாங்கும் தருணமும் நமக்குத் தேவையானவற்றை மட்டும் பயனீடு செய்து ‘சே யெஸ் டு வேஸ்ட் லெஸ்’ என கழிவுகளைக் குறைக்க இசைவுகூறும் வாய்ப்பாகும். லோஹிதா, ஊர்வி போன்ற தனிநபர்கள், ‘ட்ரீட்ஷூர்’ ‘மோனோ.எஸ்ஜி’ போன்ற நிறுவனங்கள், உங்களிடமும் என்னிடமும் வரும் எளிய செயல்கள் மூலம், நிலையான உலகத்திற்கு பங்களித்து எதிர்காலட் தலைமுறைக்கு சிறந்த சூழலை உறுதிசெய்லாம். கழிவுகளைக் குறைக்க வேறு எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை அறிய, go.gov.sg/sytwl இணையத்தளத்தை நாடலாம்.

இதை உங்களுக்கு வழங்குவது:

-
குறிப்புச் சொற்கள்