தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூனோஸ் வட்டாரத்தில் கழிவுநீர் வெளியேற்றத்துக்குக் குழாயில் ஏற்பட்ட அடைப்பே காரணம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

2 mins read
e06f5357-4ad7-40d4-9b2b-35e11ba7f922
யூனோஸ் வட்டாரத்தில் வெளியேறிய கழிவுநீர். - படம்: பிரித்தம் சிங்/ஃபேஸ்புக்

யூனோஸ் வட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பேட்டையில் ஏற்பட்ட கழிவுநீர் வெளியேற்றத்துக்குக் கட்டுமானத் தளம் ஒன்றில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பே காரணம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

பிடோக் ரெசர்வோர் சாலை மற்றும் சாய் சீயில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 6) கழிவுநீர் வெளியேறியது.

சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத்தில் இருக்கும் குழாயின் ஒரு பகுதியில் மணலும் சிமெண்ட்டும் அடைபட்டுக் கிடந்ததாக தெரியவந்துள்ளது

அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருவதாக வியாழக்கிழமை பிற்பகல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இப்பிரச்சினை தொடர்பாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை நடத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்

பாதிக்கப்பட்ட வட்டாரம் அல்ஜுனிட் குழுத் தொகுதியின் யூனோஸ் பிரிவுக்கு உட்பட்டது.

அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சிங், யூனோஸ் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கிறார்.

அவ்வட்டாரத்தில் உள்ள புளோக் 619க்கும் 623க்கும் இடையிலுள்ள பகுதியில் கழிவுநீர் வெளியேறியதாகப் புதன்கிழமை திரு சிங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை நடத்துவதாக அல்ஜுனிட் - ஹவ்காங் நகர மன்றம் தம்மிடம் தெரிவித்துள்ளதாகத் திரு சிங் தெரிவித்தார்.

தீவு விரைவுச்சாலைக்கு மறுபக்கத்தில், ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிடிஓ வீடுகள் கட்டப்படுவதாகவும் அந்த கட்டுமானத் தளம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தப்படுவதாகவும் திரு சிங் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுமானப் பணி சாய் சீ பசுமைத் திட்டத்துக்கு உட்பட்டது.

சம்பந்தப்பட்ட கழிவுநீர் குழாய் யூனோஸ் வட்டாரத்திலிருந்து தீவு விரைவுச்சாலையின் குறுக்கே சென்று சாய் சீயை அடைவதைத் திரு சிங் சுட்டினார்.

குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அதன் விளைவாகக் கழிவுநீர் பின்னோக்கிச் சென்று யூனோஸ் வட்டாரத்தில் வெளியேறியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதன்கிழமையன்று குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்த பிறகு, சாய் சீ பசுமைத் திட்ட கட்டுமானத் தளத்துக்குத் திரு சிங் சென்றார்.

அங்கு அவர் பொதுப் பயனீட்டுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கட்டுமானப் பணிகளின் பிரதான ஒப்பந்ததாரரான எல்எஸ் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் பேசினார்.

கழிவுநீர் வெளியேற்றத்தால் ஏற்பட்ட சிதறல்களை அகற்றும் பணிகள் நடைபெற்றதாகத் திரு சிங் கூறினார்.

கழிவுநீரைப் பாதிப்படையாத சாக்கடை வாயிற்புழைக்குத் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டோர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அப்போது யூனோஸ் வட்டாரத்தில் சாலைப் போக்குவரத்தை நிர்வகிக்க கட்டுமானத்துறை ஊழியர்கள் சிலர் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவித்த திரு சிங், அவர்களிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்