சாங்கி விமான நிலையம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவாக 70.4 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இருப்பினும், அதே காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 16) அறிவித்தது.
விமான நிலையத்தின் தண்ணீர் பயன்பாடு 24.4 விழுக்காடு குறைந்து, 2.32 மில்லியன் கன மீட்டராகப் பதிவாகியுள்ளது. இது 300 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் தண்ணீர் அளவுக்கு இணையான சேமிப்பாகும். இதேபோல், மின்சாரப் பயன்பாடும் 19.3 விழுக்காடு குறைந்து 368 ஜிகாவாட்-மணியாகக் குறைந்துள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு ஏறத்தாழ 19,800 நான்கறை வீவக அடுக்குமாடி வீடுகளுக்கு ஓர் ஆண்டு முழுவதும் மின்சாரம் வழங்க முடியும். இந்த பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களில் ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் பயன்பாடு சேர்க்கப்படவில்லை.
முனையங்களில் செயல்படுத்தப்பட்ட பல ஆண்டுகாலப் பொறியியல் திட்டங்களும் புத்தாக்க நடவடிக்கைகளுமே இந்த நன்மதிப்புமிக்கச் சேமிப்புக்குக் காரணம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, குளிர்சாதனக் கட்டமைப்புகளிலிருந்து வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கன மீட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இத்தண்ணீர் முனையம் 4ன் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுவதால் அங்கு மாதந்தோறும் தேவைப்படும் நியூவாட்டர் பயன்பாடு 500 கன மீட்டரிலிருந்து வெறும் 18 கன மீட்டராகக் குறைந்துள்ளது.
மேலும், கழிவறைகளில் இருந்த 170க்கும் மேற்பட்ட கையால் திருப்பும் தண்ணீர் குழாய்களுக்குப் பதிலாகத் தானியங்கி தொடு உணர் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டதால் 60 விழுக்காடு தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இதுதவிர, 2.2 ஹெக்டர் பரப்பளவிலான விமான நிலையத் தாவரப் பண்ணையில் மழைநீர்ச் சேகரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் 6,900 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரு சேகரிப்பு முனைகளில் நீர் சேமிக்கப்பட்டுப் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

