தேசிய தண்ணீர் அமைப்பான பியுபி-யின் ஜோகூர் ஆற்று நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை அந்த அமைப்பு சனிக்கிழமை (நவம்பர் 1) தெரிவித்தது.
மேலும், ஜோகூர் ஆற்றைப் பாதித்திருக்கும் நீர் மாசுபாடு குறித்து தான் அறிந்திருப்பதாகவும் ஊடகங்களிடம் அது கூறியது.
இதன் காரணமாக சிங்கப்பூரின் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தேவையைச் சமாளிக்க உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் பியுபி தெரிவித்துள்ளது.
“ஜோகூர் ஆற்று நீரின் தரத்தை பியுபி கண்காணித்து வருகிறது.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே ஜோகூர் ஆற்றில் நீர் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
“ஜோகூர் ஆற்று நீரின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பியதும் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கும்,” என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சுங்கை ஜோகூர் ஆற்று நீர்ப் பரப்பின் மேல் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் காரணமாக நீர் மாசடைந்து இருக்கலாம் என நம்பப்படும் தகவலை மலேசியாவின் சுற்றுப்புறத் துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) உறுதி செய்தது.
அதனால், தூர்வாரும் பணிகளை உடனடியாக நிறுத்த ஜோகூரின் தண்ணீர் ஒழுங்குமுறை அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக சுற்றுப்புறத் துறையின் இயக்குநர் டாக்டர் முகம்மது ஃபாமி யூசோஃப் கூறியதாக பெர்னாமா கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், ஏற்கெனவே வெளியான சேறு, ஆற்று நீரில் கலந்ததைத் தடுக்க இயலவில்லை என்று திரு ஃபாமி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆற்று நீரில் சேறு கலந்ததால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்ததை அறிந்து குடியிருப்பாளர்கள் கவலையுற்றதாக மலேசியாவின் ‘பெர்னாமா’ செய்தித்தளம் குறிப்பிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக குடியிருப்பாளர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அது கூறியது.
மற்றொரு சம்பவம்
இதற்கிடையே, மற்றொரு நீர் மாசுபாடு சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஜோகூர் நீரிணையில் நிகழ்ந்துள்ள இந்த இரண்டு மாசுபாட்டு சம்பவங்களையும் சிங்கப்பூர் அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
கம்போங் பாசிர் புதியின் கடலோரத்தில் செம்பனை எண்ணெய் கசிந்ததால் அந்தப் பகுதி நீரில் மாசு கலந்ததாகக் கூறப்பட்டது.
இவ்விரு சம்பவங்களிலும் மாசு ஏற்படுத்திய பொருள்கள் அகற்றப்பட்டதை தான் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது வாரியம். இது தொடர்பாக ஜோகூர் சுற்றுப்புறத் துறையுடன் தொடர்பில் இருப்பதாக அது கூறியது.
1962ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததத்தின்கீழ், ஜோகூர் ஆற்றில் இருந்து தினமும் 250 மில்லியன் கேலன் தண்ணீரை எடுத்துக்கொள்ள சிங்கப்பூர் அனுமதிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 2061ஆம் ஆண்டு நிறைவுறும்.
அவ்வாறு பெற்ற தண்ணீரைச் சுத்திகரித்து, அதில் 2 விழுக்காடு வரை ஜோகூருக்கு அளிக்க சிங்கப்பூர் கடமைப்பட்டுள்ளது.

