12 மணி நேரத்துக்குப் பிறகு கிளமெண்டியில் வழக்கநிலைக்குத் திரும்பிய தண்ணீர் விநியோகம்

2 mins read
கட்டுமானத் தளத்தில் தண்ணீர்க் குழாய் உடைந்ததால் பாதிப்பு
48de5246-beaa-41b4-8fb4-1efd8fb186da
தண்ணீர்க் குழாய் உடைந்ததால் புளோக் 324, கிளமெண்டி அவென்யூ 5ன் கீழ்மாடிகளில் உள்ள வீடுகளுக்கும் நான்கு மாடிகள் கொண்ட புளோக் 325ல் உள்ள வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. - படங்கள்: டான் வூ மெங்/ஃபேஸ்புக்

கிளமெண்டி வட்டாரத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 70 வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் 12 மணி நேரத்துக்குமேல் தடைபட்டிருந்த தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

முன்னதாக, கட்டுமானத் தளம் ஒன்றில் தண்ணீர்க் குழாய் வெடித்ததை அடுத்து அந்த வட்டாரத்தில் தண்ணீர் வெள்ளம்போல் சூழ்ந்தது.

புளோக் 324 கிளமெண்டி அவென்யூ 5க்கு அருகில் நடந்த இச்சம்பவம் குறித்துப் பொதுப் பயனீட்டுக் கழகம், நவம்பர் 25ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

150 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட அந்தத் தண்ணீர்க் குழாய் வெடித்ததை அடுத்து, புளோக்குகள் 324, 325ஐச் சேர்ந்த வீடுகளுக்கும் புளோக் 325ன் கீழ்த்தளத்தில் செயல்பட்ட வர்த்தகங்களுக்கும் தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகக் கழகம் கூறியது.

கழகத்தின் ஊழியர்கள் தண்ணீர்க் கசிவைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாகவும் அது குறிப்பிட்டது.

தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியதாக மாலை 5.19 மணிக்குக் கழகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. தண்ணீர்க் கசிவு குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் அது சொன்னது.

ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங், நவம்பர் 25ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில், புளோக்கில் பழுப்பு நிறத் தண்ணீர் தேங்கி நிற்பதைக் காணமுடிகிறது. சுற்றுப்புறம் இருண்டு காணப்படுவதால் அந்தக் காணொளி விடியற்காலைக்கு முன்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதிகாலையில் கழிவறைக்குச் சென்றபோது தண்ணீர் வரவில்லை என்பதை உணர்ந்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர்.

புளோக்கின் கீழ்த்தளத்தில் பலர் கூடி நின்றதைக் காணமுடிந்ததாகவும் அங்கு வெள்ளம்போல் தண்ணீர் சூழ்ந்திருந்ததைத் தெரிந்துகொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காலை 7 மணியளவில் கீழ்த்தளத்திற்கு அருகே காணப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

பாதிக்கப்பட்டோருக்கு உதவ, பொதுப் பயனீட்டுக் கழகம் ஐந்து லிட்டர் தண்ணீர்ப் பொட்டலங்களை விநியோகித்தது. நிலப் போக்குவரத்து ஆணையமும் குறுக்குத் தீவுப் பாதை எம்ஆர்டி ஒப்பந்ததாரர் குழுவும் குடியிருப்பாளர்களைச் சந்தித்தன என்று டாக்டர் டான் கூறினார்.

மாலை 5.25 மணியளவில், பாதிக்கப்பட்டோருக்குத் தண்ணீரை விநியோகித்த வாகனம் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் தண்ணீர் தேங்கி நின்ற பகுதி உலர்ந்து, தூய்மையாகக் காணப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்